

தமிழகத்தில் கோயில் திருவிழாக்கள், நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப திருக்கோவில் டிவி தொடங்கத் தடை விதிக்கக் கோரிய மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
நெல்லை அம்பையைச் சேர்ந்த பெரியநம்பி நரசிம்ம கோபாலன், உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு:
தமிழகத்தில் அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் 36,000 கோயில்கள் உள்ளன. பெரும்பாலான கோயில்களில் போதிய எண்ணிக்கையில் அர்ச்சகர்கள், இரவுக் காவலாளிகள், துப்புரவுப் பணியாளர்கள் இல்லை. பல கோயில்களில் பராமரிப்பு மற்றும்
பாதுகாப்பு இல்லை. இதனால் விலை மதிப்பு மிகுந்த சிலைகள் திருடப்படுகின்றன.
இந்நிலையில் கோயில் திருவிழாக்கள், நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப திருக்கோவில் டிவி தொடங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. கோயிலில் அர்ச்சகர்கள், இரவுக் காவலாளிகள், துப்புரவு பணியாளர் நியமனம் மற்றும் கோயில் பராமரிப்பு, பாதுகாப்புக்கு உரிய நடவடிக்கை எடுப்பதற்கு முன் திருக்கோவில் டிவி தொடங்கக் கூடாது என உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்
தது.
இதை நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி அமர்வு விசாரித்தது. அரசு வழக்கறிஞர் வாதிடும்போது, திருக்கோவில் டிவி தொடங்க ரூ.8.77 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கோயில் திருவிழாக்கள், நிகழ்ச்சிகளைப் பதிவு செய்வது, ஒளிபரப்புவது தொடர்பாக கோயில் செயல் அலுவலர்களுக்கு அறநிலையத் துறை ஆணையர் உரிய வழிகாட்டுதல்களைப் பிறப்பித்து உள்ளார் என்றார்.
மனுதாரர் வழக்கறிஞர் வாதிடும்போது, திருக்கோவில் டிவி திட்டத்தை எதிர்க்கவில்லை. ஆனால் அதற்கு முன்பு கோயில்கள் பராமரிப்பு, பாதுகாப்புக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்றார்.
இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: திருக்கோவில் டிவி தொடங்கும் அரசின் கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது. இந்த விவகாரத்துடன் அர்ச்சகர்கள், பணியாளர்கள் நியமனப் பிரச்சினையை இணைக்கக் கூடாது.
கோயில்களின் பாதுகாப்பு, பராமரிப்பு விஷயங்கள் அறநிலையத் துறையின் பொறுப்பு என்பதை சொல்லித்தான் தெரிய
வேண்டியதில்லை.
அதற்காக திருக்கோவில் டிவி தொடங்குவதை நிறுத்தத் தேவையில்லை. இம்மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. மனுதாரர் தனது கோரிக்கை தொடர்பாக உரிய அமைப்பை அணுகி முறையிடலாம்.
இவ்வாறு நீதிபதிகள் தங்கள் உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர்.