

சூரிய மண்டலத்தில் வியாழன், சனி ஆகிய இரு கோள்களும் மிகப்பெரியவை. இவை கடைசியாக 1623-ம் ஆண்டு அருகருகே ஒன்றை ஒன்று உரசிக் கொள்ளும் விதமாக தோன்றின. அதன்பிறகு, இந்த இரு கிரகங்களும் மிக நெருக்கமாக வரும் நிகழ்வு இன்றுநடக்கிறது.
இன்று (21-ம் தேதி) சூரிய அஸ்தமனத்துக்கு பிறகு, மாலை 6.30 மணிக்கு தென்மேற்கு திசையில் வியாழன், சனி ஆகிய 2 கோள்களும் ஒன்றையொன்று முட்டி மோதிக்கொண்டு நிற்பது போன்ற காட்சி தென்படும்.
இரு கோள்களும் நேற்றே (20-ம்தேதி) நெருங்கிய நிலையில் காணப்பட்டன. ஆனால், இன்றுதான் மிக நெருக்கமாக வருகின்றன. இதை வெறும் கண்களால் பார்க்கும்போது இரு கோள்களும் இடித்துக்கொண்டு இருப்பது போல தோன்றினாலும், பைனாகுலர் வழியே பார்க்கும்போது சிறிய இடைவெளி உள்ளதை தெளிவாக காணலாம். 22, 23 ஆகிய அடுத்தடுத்த நாட்களில் 2 கோள்களுக்கும் இடையே இடைவெளி அதிகரிப்பதையும் காண முடியும்.