

ஜெருசலேம் புனித யாத்திரைக்கு வழங்கப்படும் அரசு உதவித் தொகை ரூ.20 ஆயிரத்தில் இருந்து ரூ.37 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
அதிமுக சார்பில் கிறிஸ்துமஸ் விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் கேக் வெட்டி, இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான பழனிசாமி உள்ளிட்டோருக்கு வழங்கினார். தொடர்ந்து முதல்வர் பழனிசாமி பேசியதாவது:
‘வேற்றுமையில் ஒற்றுமை’ என்ற உணர்வில் இருந்து அதிமுக ஒருபோதும் மாறாது. கிறிஸ்துமஸ், ரம்ஜான் போன்ற பண்டிகைகளை ஒரு குடும்ப நிகழ்வாக தொடர்ந்துநடத்தி வருகிறோம். அதிமுகவின் இருபெரும் தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா காட்டியபாதையில் அவர்களது எளிய தொண்டனாக, அனைத்து மக்களின் நலன்கள், உரிமைகளையும் பாதுகாத்து, எதிர்பார்ப்புகளை நிறைவேற்றி எங்கள் பொதுவாழ்வு பயணத்தை நடத்திக் கொண்டிருக்கிறோம்.
நாட்டிலேயே முதல்முறையாக தமிழக கிறிஸ்தவர்கள் ஜெருசலேம் புனிதப் பயணம் மேற்கொள்ள நிதியுதவி அளிக்கும் திட்டத்தை ஜெயலலிதா செயல்படுத்தினார். இத்திட்டம் 2011 முதல்செயல்படுத்தப்பட்டு வருகிறது. புனிதப் பயணம் செல்வோருக்கு தலா ரூ.20 ஆயிரம் வழங்கப்படுகிறது. இந்த உதவித் தொகை ரூ.20ஆயிரத்தில் இருந்து ரூ.37 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும்.
2020-21 ஆண்டில் தமிழகத்தில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்கள் புனரமைப்பு, பழுது நீக்குவதற்கான நிதி ஒதுக்கீட்டை ரூ.1 கோடியில் இருந்து ரூ.5 கோடியாக உயர்த்தி வழங்க உத்தரவிட்டுள்ளேன்.
கொள்கை வேறு, கூட்டணி வேறு. ஒவ்வொரு கட்சிக்கும் கொள்கை உண்டு. அதிமுக தனது கொள்கைப்படியே செயல்படும். அதிமுகவும், அதிமுக அரசும் சிறுபான்மை மக்களுக்கு எப்போ தும் பாதுகாப்பு அரணாக இருக் கும். இவ்வாறு முதல்வர் கூறினார்.
துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பேசியதாவது:
கிறிஸ்தவ சமூகத்தின் பணிகள், இன்னும் பல கோடி மக்களை சென்றடையவும், கிறிஸ்தவ சமூகத்துக்கு பாதுகாப்பு அரணாக விளங்கவும், சிறுபான்மை மக்கள் அனைவரையும் அரவணைத்துச் செல்லவும் அதிமுக தன்னை முழுமையாக அர்ப்பணித்து செயல்படும் என்ற உறுதிமொழியை அளிக்கிறேன். மதச் சார்பின்மை, ஏழை, எளியோருக்கு உயர்வு தர உழைப்பது, சமத்துவ சமதர்ம சமுதாயம் காணப் பாடுபடுவது என்ற உயர்ந்த லட்சியங்களை நாங்கள் உறுதியாக கடைபிடிப்போம்.
இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.
விழாவில் அமைச்சர்கள், அதிமுகஎம்.பி.க்கள், எம்எல்ஏக்கள், கிறிஸ்தவப் பேராயர்கள், அருட்தந்தை யர், அருட்சகோதரிகள் உட்படஏராளமானோர் பங்கேற்றனர்.