

சுற்றுச்சூழல் அதிகாரி பாண்டியன் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் பெயரில் உள்ள சொத்து விவரங்களை வழங்குமாறு பத்திரப் பதிவு துறைக்கு லஞ்ச ஒழிப்பு போலீஸார் கடிதம் அனுப்பியுள்ளனர்.
சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகையில் உள்ள சுற்றுச்சூழல் அதிகாரி பாண்டியனின் அலுவலகம், வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் கடந்த 14-ம் தேதி சோதனை நடத்தினர். இதில் ரூ.7 கோடி மதிப்புள்ள 18 சொத்து ஆவணங்கள், ரூ.1.37 கோடி ரொக்கம், 3 கிலோ தங்க நகைகள், ரூ.5.40 லட்சம் மதிப்புள்ள வைரம், 3.343 கிலோ வெள்ளி மற்றும் வங்கிக் கணக்கில் ரூ.38.66 லட்சம், நிரந்தர வைப்புத் தொகை ரூ.37 லட்சம் தொடர்பான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக பாண்டியன் மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது. விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மனும் அனுப்பப்பட்டுள்ளது.
அவரை கைது செய்யும் நடவடிக்கையிலும் லஞ்ச ஒழிப்பு போலீஸார் ஈடுபட்டுள்ளனர். சில வங்கிகளில் அவரது பெயரில் உள்ள லாக்கர்களை திறந்துசோதனை செய்யவும் திட்டமிட்டுள்ளனர்.
குடும்ப உறுப்பினர்கள்
மேலும், பாண்டியன் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ள சொத்து விவரங்களை வழங்குமாறு, பத்திரப் பதிவு துறைக்கு லஞ்ச ஒழிப்பு போலீஸார் கடிதம் அனுப்பியுள்ளனர். இதற்காக, பாண்டியன், குடும்ப உறுப்பினர்களின் ஆதார் கார்டு, பான் கார்டு உள்ளிட்ட அடையாள அட்டைகளின் விவரங்களை பத்திரப் பதிவு துறைக்கு லஞ்சஒழிப்பு போலீஸார் கொடுத்துள்ளனர்.