Published : 21 Dec 2020 03:15 AM
Last Updated : 21 Dec 2020 03:15 AM

சுல்தான்பேட்டை மேற்குப் பகுதியில் வறட்சியின் பிடியில் சிக்கித் தவிக்கும் கிராமங்கள்: தண்ணீருக்கு காத்திருக்கும் விவசாயிகள்

கோவை

கோவை மாவட்டம் சுல்தான்பேட்டை மேற்குப் பகுதியில் வறட்சியின் பிடியில் சிக்கித் தவிக்கும் கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள், தண்ணீரை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

சூலூர் வட்டத்துக்கு உட்பட்ட சுல்தான்பேட்டை ஒன்றியத்தின் மேற்குப் பகுதியில் கள்ளப்பாளையம், பாப்பம்பட்டி, செலக்கரிச்சல், இடையர்பாளையம், போகம்பட்டி, பொன்னாக்கானி, அப்பநாயக்கன்பட்டி, வடவள்ளி, பச்சாபாளையம், பூராண்டாம்பாளையம் உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. வேளாண் சாகுபடியே இக்கிராமங்களைச் சேர்ந்த மக்களின் வாழ்வாதாரமாக உள்ளது.

இந்த கிராமங்கள், மற்ற பகுதிகளைச் காட்டிலும் மேடான பகுதியில் அமைந்துள்ளன. மழையையே நம்பியுள்ள இப்பகுதியின் நீர்நிலைகளுக்கு தண்ணீர் வரத்து எப்போதும் குறைவாகவே இருக்கும். இதனால் பல ஆண்டுகளாகவே இந்தக் கிராமங்கள் வறட்சியின் பிடியில் சிக்கித் தவிக்கின்றன.

இதுகுறித்து சுல்தான்பேட்டை பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் சிலர் கூறியதாவது: சுல்தான்பேட்டையின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள கிராமங்களில், 10 ஆயிரம் ஏக்கருக்கு மேற்பட்ட நிலங்களில் கீரைகள், பீட்ரூட், தக்காளி, மிளகாய், வெங்காயம், மக்காச்சோளம், சோளம் உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. இதேபோல, கோழிகள் மற்றும் கால்நடை வளர்ப்பும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இப்பகுதியில் உள்ள நீர் நிலைகளில் பருவ மழைக்காலங்களில்கூட மழைநீர் தேங்குவதில்லை. நீர்வழிப் பாதைகள் மறைந்து விட்டன. இதனால் பல ஆண்டுகளாக குளம், குட்டைகள் வறண்டு கிடக்கின்றன. ஆழ்குழாய்க் கிணற்று நீரை நம்பியே விவசாயம் நடக்கிறது. தற்போது ஆழ்குழாய்க் கிணறு அமைத்தாலும், 1,750 அடிக்கு கீழ் தான் தண்ணீர் கிடைக்கிறது. இதனால் விவசாயம் செய்வது மிகவும் சவாலாக உள்ளது.

மேற்குப் பகுதி கிராமங்களுக்கு பி.ஏ.பி. வாய்க்காலில் இருந்தோ அல்லது ஒண்டிப்புதூரில் உள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்தோ குழாய் மூலம் தண்ணீர் கொண்டுவர வேண்டும் என்று பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகிறோம். ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. தண்ணீர்ப் பற்றாக்குறையால் பலரும் விவசாயத்தைக் கைவிடத் தொடங்கிவிட்டனர். எனவே, இந்தப் பிரச்சினையை மாவட்ட நிர்வாகம், தமிழக அரசின் கவனத்துக்குக் கொண்டுசென்று, உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x