

மயிலாப்பூர் உள்ளிட்ட இடங் களில் சாலையில் நடந்து சென்றவர்களின் பூணூலை அறுத்த 6 பேரை குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைக்க மாநகர காவல் ஆணையர் பிறப்பித்த உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் நேற்று ரத்து செய்தது.
சென்னையில் மயிலாப்பூர், மேற்கு மாம்பலம், திருவல்லிக் கேணி ஆகிய இடங்களில் கடந்த ஏப்ரல் 20-ம் தேதி சாலையில் நடந்து சென்றவர்களின் பூணூலை அறுத்ததாக திராவிடர் விடுதலை கழகத்தைச் சேர்ந்த சிலர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்குகளில் கைதான ராவணன், திவாகர், கோபிநாத், பிரதீப், பிரபாகர், நந்தகுமார் ஆகிய 6 பேரை குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க சென்னை மாநகர காவல் ஆணையர் மே 13-ம் தேதி உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மேற்கண்ட 6 பேர் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. நீதிபதிகள் எஸ்.தமிழ்வாணன், சி.டி.செல்வம் ஆகியோர் கொண்ட அமர்வு விசாரித்து பிறப்பித்த உத்தரவு:
கைதுக்கான சம்மன், கைது குறித்த தகவல், சிறையில் அடைப்பதற்கான உத்தரவு ஆகியவற்றின் நகல்கள் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு வழங்கப்படவில்லை. இது முறையற்றது. சட்ட நடை முறைகளை பின்பற்றாமலும் அவர்களை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிடப் பட்டுள்ளது. அவர்கள் வழக்கமான குற்றவாளிகள் என்பதற்கான ஆவணங்களும், குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைப்பதற்கு தகுதியானவர்கள் என்பதற்கான ஆவணங்களும் சமர்ப்பிக்கப்படவில்லை.
குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பதற்கான உத்தரவு தாமதமாகவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே, மனுதாரர்கள் 6 பேரையும் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைக்க சென்னை மாநகர காவல் ஆணையர் பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.