

சென்னை மாநகரப் பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகளில் இருந்து தயாரிக்கப்படும் உரம், தேங்காய் நார்களைக் கொண்டு மாநகராட்சி அலுவலக கட்டிடங்களின் மீது சோதனை அடிப்படையில் மாடித் தோட்டங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.
நகர்ப்புறங்களில் காய்கறிகளின் விலை அதிகமாக உள்ளது. நடுத்தர குடும்பங்களில் காய்கறி செலவு பெரும் சுமையாக உள்ளது. சென்னை மாநகரில் உள்ள சில்லறை விற்பனை சந்தைகளில் பெரும்பாலான காய்கறிகள் தற்போது கிலோ ரூ.30-க்கும் அதிகமாக விற்கப்படுகின்றன.
தற்போது ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படும் காய்கறிகள்தான் சந்தைகளில் கிடைக்கின்றன. இயற்கை முறையில் தயாரிக்கப்படும் காய்கறிகளின் விலை, நடுத்தர குடும்பங்கள் வாங்கும் நிலையில் இல்லை. இந்தச் சூழலில், நகர்ப்புற மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சென்னை மாநகராட்சி கட்டிடங்களில் தற்போது மாடித் தோட்டங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. அவற்றில் மூலிகை மற்றும் காய்கறிச் செடிகள் நட்டு வளர்க்கப்படுகின்றன.
இது தொடர்பாக சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:
சென்னை மாநகரத்தில் தினமும் சுமார் 5 ஆயிரம் டன்களுக்கு மேல் குப்பைகள் சேகரிக்கப்படுகின்றன. அவற்றில் இருந்து மக்கும் குப்பைகளை வகை பிரித்து, தினமும் சுமார் 400 டன் ஈரக் குப்பைகளில் இருந்து இயற்கை உரம் தயாரிக்கப்படுகிறது. மேலும், தேங்காய், இளநீர் கழிவுகளில் இருந்து நார் மற்றும் துகள்கள் பிரித்தெடுக்கப்படுகின்றன. இவற்றைப் பயன்படுத்தி, சோதனை அடிப்படையில் மாநகராட்சி கட்டிடங்களின்மேல் பகுதிகளில் மாடித் தோட்டங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.
வடசென்னை மூலக்கொத்தலத்தில் உள்ள மாநகராட்சி வடக்கு வட்டார துணை ஆணையர் அலுவலகம், மணலி மற்றும் மாதவரம் மண்டல அலுவலக கட்டிடங்களின் மாடிகளில் சோதனை அடிப்படையில் மாடித் தோட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மத்திய சென்னை, தென் சென்னை பகுதிகளிலும் மாநகராட்சி கட்டிடங்களில் மாடித்தோட்டம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த மாடித் தோட்டங்களில் மூலிகை வகைகளான பிரண்டை, துளசி, தூதுவளை, முடக்கத்தான் மற்றும் காய்கறி வகைகளான கத்தரிக்காய், வெண்டைக்காய், தக்காளி உள்ளிட்டவை வளர்க்கப்பட்டு வருகின்றன. இங்கு விளையும் காய்கறிகள், இந்த தோட்டத்தை பராமரிக்கும் தூய்மைப் பணியாளர்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது.
இத்திட்டம் மூலம், வீட்டுக்குத் தேவையான காய்கறி செலவை குறைக்கவும், இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட உணவை உண்ணவும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் மூலம் மகளிருக்கு மாடித்தோட்டம் அமைப்பது குறித்து பயிற்சி அளிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கு தேவையான இயற்கை உரமும் மாநகராட்சியில் கிலோ ரூ.20 விலையில் கிடைக்கிறது.
இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.