Published : 21 Dec 2020 03:15 AM
Last Updated : 21 Dec 2020 03:15 AM

அதிக கட்டணம் வாங்கும் தனியார் ஆம்புலன்ஸ்கள்: மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுகோள்

செங்கல்பட்டு மாவட்டத்தில் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை, கிழக்கு கடற்கரை சாலை, பழைய மகாபலிபுரம் சாலை உள்ளிட்ட முக்கிய நெடுஞ்சாலைகள் உள்ளன. இங்கு அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன.

விபத்தில் சிக்கியவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்படுகின்றனர். சில இடங்களில் 108 ஆம்புலன்ஸ் வர காலதாமதம் ஏற்படுவதால் அருகில் உள்ள தனியார் மருத்துவமனை அல்லது தனியார் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுகின்றனர்.

ஒரு சில ஆம்புலன்ஸ் உரிமையாளர்கள் மனிதாபிமான அடிப்படையில் வாடகை பெற்றுக் கொண்டு செல்கின்றனர். சில ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் குறைந்தபட்சம் ரூ.2,500, அதிகபட்சம் ரூ.5 ஆயிரம் கட்டணம் வசூலிக்கின்றனர். ஆம்புலன்ஸ் உரிமையாளர்கள் அப்பாவி மக்களிடம் அநியாயமாக வசூலிப்பதாக புகார் எழுந்துள்ளது.

எனவே ஆம்புலன்ஸ் இயக்க கட்டணத்தை முறைப்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் சிலர் கூறும்போது, "ஆம்புலன்ஸ் ஓட்டுவது மனிதநேய மிக்க பணி. அதை கவனத்தில் கொள்ளாமல், மனம் வருத்தத்துடன் காணப்படும் நோயாளிகளின் உறவினர்களிடம் அநியாயமாக சில தனியார் ஆம்புலன்ஸ் நிர்வாகத்தினர் கட்டணத்தை வசூலிக்கின்றனர். உறவினர்களின் நிலைமை கண்டு செய்வதறியாமல் தவிக்கும் நோயாளிகளின் உறவினர், நண்பர்களின் இயலாமையை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு தனியார் ஆம்புலன்ஸ் உரிமையாளர்கள் அதிக கட்டணம் வசூலிக்கின்றனர்.

ஏழை, எளிய மக்களும் உயிரை காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கில் செய்வதறியாது அதிக பணத்தை கொடுத்துவிட்டு செல்கின்றனர். கட்டணக் கொள்ளையை தடுக்கவும் கட்டணத்தை முறைப்படுத்தவும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x