Published : 31 May 2014 09:27 PM
Last Updated : 31 May 2014 09:27 PM

எகிப்திலும் அம்மா உணவக மாதிரி: பிரதிநிதிகள் ஆர்வம்

சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை மற்றும் திருப்பரங்குன்றம் முருகன் கோயில் அருகில் உள்ள அம்மா உணவகங் களை பார்வையிட்ட எகிப்து அதிகாரிகள், தமிழக முதல்வருக்கு பாராட்டு தெரிவித்தனர். இந்த இரு அம்மா உணவகங்களுக்கும் ஐ.எஸ்.ஓ. தரச் சான்றிதழ் விரைவில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏழை, எளிய மக்களுக்கு மலிவு விலையில் உணவு வழங்குவதற்காக சென்னை மாநகராட்சி சார்பில் ‘அம்மா உணவகம்’ தொடங்கப்பட்டது. தற்போது வார்டுக்கு ஒன்று வீதம் 200 அம்மா உணவகங்கள் உள்ளன. இதுதவிர, ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை, ஸ்டான்லி மருத்துவமனை, எழும்பூர் அரசு மருத்துவமனை ஆகிய இடங்களிலும் அம்மா உணவகம் தொடங்கப்பட்டது. மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத் ததையடுத்து, மற்ற மாநகராட்சி களிலும் அம்மா உணவகம் திறக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் உள்ள அம்மா உணவகத்தை எகிப்து நாட்டின் வணிகம் மற்றும் தொழில்துறை அதிகாரிகள் முகமது அதல் ரசக், டாக்டர் அஹ்மத் கலீல் ஆகியோர் பார்வை யிட்டனர். பின்னர், நிருபர்களிடம் முகமது அதல் ரசக் கூறுகையில், “அம்மா உணவகம் சுகாதாரமான, பாதுகாப்பான முறையில் நடத்தப்பட்டு வருகிறது.

இதற்காக தமிழக முதல்வர் மற்றும் சென்னை மேயருக்கு பாராட்டு தெரிவித்துக் கொள்கிறேன். இதேபோன்று எங்கள் நாட்டிலும் ஆரம்பிக்க உள்ளோம்” என்றார்.

மதுரை திருப்பரங்குன்றம் முருகன் கோயில் அருகில் உள்ள அம்மா உணவகத்தை கடந்த வாரம் பார்வையிட்ட டாக்டர் அஹ்மத் கலீல் கூறுகையில், “எங்கள் நாட்டில் சில தொண்டு நிறுவனங்கள் மூலம் இதுபோன்ற உணவகங்கள் நடத்தப்படுகின்றன. ஆனால், அங்கு இதுபோன்ற முழு உணவு கிடைப்பதில்லை. இங்கு அரிசி மட்டுமல்லாது, காய்கறிகள், கீரை உள்ளிட்ட ஊட்டச்சத்தான உணவு வழங்கப்படுகிறது’’ என்றார்.

ஐ.எஸ்.ஓ. தரச் சான்றிதழ் அளிக்க உரிமை பெற்றுள்ள க்வெஸ்ட் நிறுவனத்தின் இயக்குநர் பி.கார்த்திகேயன் கூறுகையில், “சரியான நிறுவனத்துக்குத்தான் ஐ.எஸ்.ஓ. தரச் சான்றிதழ் தரப்படுகிறதா என்பதை உறுதி செய்வதற்கு சர்வதேச அங்கீகார மன்றம் உள்ளது. இதன் உறுப் பினராக உள்ள எகிப்து நாட்டு பிரதிநிதிகள் இங்கு வந்துள்ளனர். அவர்களுக்கு மதுரை மற்றும் சென்னையில் 2 அம்மா உணவகத்தை காட்டியுள்ளோம். அம்மா உணவகத்தின் செயல்பாடு கள் அவர்களுக்கு திருப்தியாக இருக்கிறது.

அம்மா உணவகத்தில், வாங்கப்படும் சமையல் பொருட்கள், பெண்கள் அணியும் தலை உறை, பயன்படுத்தப்படும் குடிநீர் என அனைத்தும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டன. எனவே, இன்னும் ஒரு மாதத்தில் இரு அம்மா உணவகங்களும் ஐ.எஸ்.ஓ. தரச் சான்றிதழ் கிடைக்க வாய்ப்புள்ளது” என தெரிவித்தார்.

ஐ.எஸ்.ஓ. தர சான்றிதழ் என்றால் என்ன?

ஐ.எஸ்.ஓ (International Standard Organisation) தரம் என்பது சர்வதேச தரங்களுக்கான அமைப்பு. ஒவ்வொரு நிறுவனமும் எப்படிப்பட்ட தரக் கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வேண்டும் என்று பல நாடுகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் நிர்ணயிப்பர். ஐ.எஸ்.ஓ.வால் நேரடியாக தரச் சான்றிதழை வழங்க இயலாது. எனவே, இந்தச் சான்றிதழை அளிப்பதற்கு உரிமம் பெற்ற அமைப்புகளிடமிருந்து மட்டுமே இவற்றைப் பெற முடியும். அந்த அமைப்புகள், நிறுவனங்கள் எவ்வாறு செயல்படுகின்றன என்று ஆய்வு செய்து சான்றிதழை வழங்குகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x