

புதுச்சேரி அருகே பிரச்சாரத்துக்கு சென்ற பாஜகவினரை பொதுமக்கள் ஊருக்குள் நுழைய விடாமல் விரட்டி அடித்தனர். இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
புதுச்சேரியில் பாஜக தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி யுள்ளது. நேற்று முன்தினம் கனகசெட்டிகுளம் பகுதியில் இருந்து 'காண்போம் இனி நல்லாட்சி - காங்கிரஸ் இல்லா புதுச்சேரி' என்ற கோஷத்துடன் தொடங்கிய இந்த பிரச்சாரத்தை புதுச்சேரி முழுவதும் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
இதன் ஒரு பகுதியாக திருபுவனை தொகுதியில் நேற்று முன்தினம் பாஜக துணைத்தலைவர் தங்க.விக்ரமன் தலைமையில் எஸ்சி அணித் தலைவர் ஆறுமுகம், திருபுவனை தொகுதி தலைவர் முருகன் உட்பட 50-க்கும் மேற்பட்டோர் பிரச்சாரம் மேற்கொண்டனர். திருபுவனை பெரியபேட் பகுதியில் பாஜகவினர் ஊர்வலமாக பிரச்சாரத்துக்கு சென்றபோது அவர்களை பொதுமக்கள் சிலர் ஊருக்குள் நுழைய விடாமல் தடுத்து நிறுத்தினர். மேலும், அவர்கள் மீது கற்களை வீசியதோடு பாஜகவினர் கொண்டுவந்த பிரச்சார நோட்டீஸ்களையும் கிழித்து எறிந்து திரும்பி செல்லுமாறு எச்சரித்தனர். சிலர் பிரச்சார வாகனத்தின் மீது ஏறியும் தடுத்தனர்.
தகவலறிந்த திருபுவனை போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று மேலும் பிரச்சினை ஏற்படாமல் தடுத்து நிறுத்தினர். அதன் பின்னர் பாஜகவினர் அங்கிருந்து திரும்பிச் சென்றனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து பாஜக சார்பில் திருபுவனை காவல் நிலையத் தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதன்பேரில் போலீஸார் அப்பகுதியைச் சேர்ந்த பிரவீன், இளங்கோ ஆகிய 2 பேரை கைது செய்து விசா ரித்து வருகின்றனர்.
இதற்கிடையே பிரச்சாரத்துக்கு சென்ற பாஜகவினரை பொதுமக்கள் ஊருக்குள் நுழைய விடாமல் விரட்டி அடித்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வைரலாகி வருகிறது.