

‘‘கமல்ஹாசன் அரசியலில் தடம் பதிக்கப் போவதில்லை’’ என்று அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்தார்.
கோவில்பட்டியில் அவர் செய்தி யாளர்களிடம் கூறியதாவது:
அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் யார் என்பதை நாங்கள் முடிவு செய்து அறிவித்து விட்டோம். அந்த நிலைப்பாட்டில் தான் தேர்தலை சந்திப்போம். அடுத்தவர்கள் கூறுவதை பற்றி நாங்கள் கவலைப்படவில்லை.
கரோனாவால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள தால் இந்தாண்டு பொங்கல் பண்டிகைக்கு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.2,500 வழங்கப்படும் என பெருந்தன்மையோடு முதல்வர் அறிவித்துள்ளார். அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் பொங்கல் பரிசு வழங்க வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்தால், முதல்வர் பரிசீலிப்பார்.
தவறான பிரச்சாரம் எடுபடாது
எங்களை பொருத்தவரை கமல்ஹாசன் ஒரு பொருட்டே கிடையாது. அரசியலில் அவர் தடம் பதிக்க போவதில்லை. அவர் சம்பந்தமில்லாமல் பேசி வருகிறார். எம்ஜிஆர் அதிமுகவை தொடங்கிய பின்னர் நடந்த 10 பொதுத்தேர்தல்களில் 7 முறை வெற்றி பெற்றுள்ளோம். எனவே, தவறான பிரச்சாரம் மக்களிடம் எடுபடாது.
கரோனா ஊரடங்கு காலத்துக்கு பின்னர் ரயில்கள் முன்புள்ள பெயர்களில் இயக்கப்படாமல் சிறப்பு ரயில்களாக இயக்கப்படுவதால் கோவில்பட்டியில் நிற்காமல் செல்கின்றன. விரைவில், ரயில்கள் அதனதன் பெயர்களில் இயக்கப்படும் போது, முன்பிருந்த நிலை தொடரும் என எனது கடிதத்துக்கு மத்திய ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல் பதில் அனுப்பி உள்ளார்.
முதல்வரின் அனுமதி பெற்று இம்மாத இறுதிக்குள் டெல்லி சென்று, திரைத் துறையினரின் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரை சந்திக்க உள்ளேன். அப்போது மத்திய ரயில்வே அமைச்சரையும் சந்தித்து, தூத்துக்குடி மாவட்டத்துக்கான புதிய ரயில்கள், ரயில்களின் நிறுத்தத்தை அதிகரிப்பது குறித்து நேரடியாக கோரிக்கை வைக்க உள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.