காரைக்குடி அருகே ஆளும் கட்சியினர் தலையீட்டால் இடம் மாறிய மினி கிளினிக்: கிராம மக்கள் போராட்டம்

பிரதிநிதித்துவப் படம்.
பிரதிநிதித்துவப் படம்.
Updated on
1 min read

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே ஆளும் கட்சியினர் தலையீட்டால் மினி கிளினிக் வேறு இடத்திற்கு மாறியதைக் கண்டித்து கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர்.

சுகாதாரத்துறை சார்பில் தமிழகம் முழுவதும் 2,000 மினி கிளினிக்குகள் தொடங்கப்பட்டு வருகின்றன. இந்த கிளினிக்குகளில் தலா ஒரு மருத்துவர், செவிலியர், பணியாளர் இருப்பர். இந்த கிளினிக்குகள் காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரையும் செயல்படும்.

சிவகங்கை மாவட்டத்தில் 14 இடங்களில் கிளினிக்குகள் தொடங்கப்படுகின்றன. அவற்றை கதர்கிராமத் தொழில்கள் நலவாரியத்துறை அமைச்சர் ஜி.பாஸ்கரன் தொடங்கி வைத்து வருகிறார். காரைக்குடி அருகே பெத்தாச்சிக் குடியிருப்பில் மினி கிளினிக் தொடங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தது.

ஆனால், ஆளும் கட்சியினர் தலையீட்டால் சிறுகப்பட்டியில் உள்ள நூலகக் கட்டிடத்தில் மினி கிளினிக் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதைக் கண்டித்து, பெத்தாச்சிக் குடியிருப்பு மக்கள் புதுவயல் - அறந்தாங்கி சாலையில் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர்.

அவர்களிடம் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். மாவட்ட ஆட்சியரிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாகக் காவல்துறையினர் கூறியதை அடுத்து கிராம மக்கள் கலைந்து சென்றனர்.

இதுகுறித்துக் கிராம மக்கள் கூறுகையில், "சுகாதாரத்துறை அதிகாரிகள் ஒப்புதலோடுதான் பெத்தாட்சி குடியிருப்புப் பகுதியில் மினி கிளினிக் தொடங்க அரசு கட்டிடத்தை ஊராட்சித் தலைவர் சீரமைத்து வந்தார். அதற்குள் ஆளுங்கட்சி பிரமுகர் தலையீட்டால் திடீரென சிறுகப்பட்டியில் கிளினிக் தொடங்கப்படும் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

பீர்க்கலைக்காடு ஆரம்ப சுகாதார நிலையம் சிறுகப்பட்டியில் இருந்து ஒரு கி.மீ. தொலைவில் உள்ளது. ஆனால், எங்கள் கிராமத்தில் இருந்து 5 கி.மீ. செல்ல வேண்டும். இதனால் எங்கள் கிராமத்தில்தான் மினி கிளினிக் தொடங்க வேண்டும்" என்று கூறினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in