Last Updated : 20 Dec, 2020 06:49 PM

 

Published : 20 Dec 2020 06:49 PM
Last Updated : 20 Dec 2020 06:49 PM

தேர்தலை முன்னிட்டு திருப்பத்தூர் மாவட்டத்துக்கு 6,180 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வருகை

மகராஷ்டிர மாநிலத்தில் இருந்து திருப்பத்தூர் மாவட்டத்துக்கு லாரிகளில் கொண்டு வரப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் ஆய்வு செய்தார். உடன் எஸ்.பி. விஜயகுமார் உட்பட பலர் உள்ளனர்.

திருப்பத்தூர்

மகாராஷ்டிர மாநிலத்தில் இருந்து 6,180 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் திருப்பத்தூர் மாவட்டத்துக்கு இன்று வந்தடைந்தன. இதை அனைத்துக் கட்சியினர் முன்னிலையில் ஆய்வு செய்து வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனைச் சங்கக் கிடங்கில் வைத்து சீல் வைக்கப்பட்டது.

தமிழகத்தில் 2021-ம் ஆண்டு சட்டப்பேரவைக்கான தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாடுகள் தற்போது தொடங்கியுள்ளன. அரசியல் கட்சியினரும் தங்களது தேர்தல் பிரச்சாரங்களைத் தொடங்கியுள்ளதால் தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

இந்நிலையில், வெளிமாநிலங்கள் மற்றும் வெளிமாவட்டங்களில் இருக்கும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி பல்வேறு மாவட்டங்களுக்குக் கொண்டு சென்று மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஆய்வு செய்து பாதுகாப்புடன் வைக்க இந்தியத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, மகாராஷ்டிர மாநிலம், 'பீட்' மற்றும் 'சோலாப்பூர்' மாவட்டங்களில் இருந்து 4 லாரிகளில் 6,180 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் திருப்பத்தூர் மாவட்டத்துக்கு இன்று (டிச.20) கொண்டு வரப்பட்டன.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள 4 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்குப் பயன்படுத்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை அனைத்து அரசியல் கட்சியினர் முன்னிலையில் மாவட்டத் தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான சிவன் அருள் ஆய்வு செய்தார்.

இதைத் தொடர்ந்து, திருப்பத்தூரில் உள்ள வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனைச் சங்கக் கிடங்கில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்புடன் வைத்து கிடங்குக்கு சீல் வைக்கப்பட்டது.

இதுகுறித்து, மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் கூறும்போது, "தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு திருப்பத்தூர் மாவட்டத்துக்கு வி.வி.பேட் 1,970, பேலட் யூனிட் 2,390, கன்ட்ரோல் யூனிட் 1,820 என மொத்தம் 6,180 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டு அனைத்து அரசியல் கட்சியினர் மற்றும் அரசு அதிகாரிகள் முன்னிலையில் ஆய்வு செய்யப்பட்டு பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன.

மின்னணு வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனைச் சங்கக் கிடங்குக்கு 24 மணி நேரம் ஆயுதம் ஏந்திய காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்.

வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்த முகாம் மற்றும் இணையதள வழியில் பெறப்பட்டுள்ள விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன. ஜனவரி மாதம் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்" என்றார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார், டிஆர்ஓ தங்கைய்யா பாண்டியன், சார் ஆட்சியர் வந்தனாகர்க், துணை ஆட்சியர் அப்துல்முனீர், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் வில்சன் ராஜசேகர், வட்டாட்சியர் மோகன் உட்பட பலர் உடனிருந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x