

நடிகர் ரஜினிகாந்த் புதிதாகத் தொடங்கவுள்ள கட்சிக்கு மக்கள் சேவை கட்சி எனத் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்தால், நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்வோம் என, அகில இந்திய மக்கள் சேவை இயக்கத் தலைவர் தங்க.சண்முக சுந்தரம் தெரிவித்துள்ளார்.
அரியலூரில் அகில இந்திய மக்கள் சேவை இயக்க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் இன்று (டிச. 20) நடைபெற்றது. கூட்டத்துக்கு இயக்கத்தின் பொருளாளர் மு.வரதராஜன் தலைமை வகித்தார். திருமானூர் ஒன்றியப் பொறுப்பாளர் அன்புதாசன் முன்னிலை வகித்தார். சட்ட ஆலோசகர் பிரகாஷ் உட்பட பலரும் கலந்து கொண்டனர். இயக்கத்தின் தலைவர் தங்க.சண்முக சுந்தரம் வளர்ச்சி குறித்துப் பேசினார்.
கூட்டத்தில் பேசிய தங்க.சண்முக சுந்தரம், "நடிகர் ரஜினிகாந்த் புதிதாகத் தொடங்கவுள்ள கட்சிக்கு மக்கள் சேவை கட்சி எனப் பெயரிடப்படுவதாகத் தகவல்கள் வெளிவருகின்றன. ஏற்கெனவே, அகில இந்திய மக்கள் சேவை இயக்கம் என்ற பெயரில் கடந்த 25 ஆண்டுகளாக மக்களுக்குப் பல்வேறு சேவைகளைச் செய்து வருகின்றோம்.
இந்நிலையில், ரஜினி தனது கட்சிக்கு மக்கள் சேவை கட்சி என தேர்தல் ஆணையத்தில் பெயர் பதிவு செய்தால் மக்களிடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தும். எனவே, கட்சிப் பெயரை ரஜினி மாற்றிக்கொள்ள வேண்டும். மீறிப் பதிவு செய்தால் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுப்போம் எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதுகுறித்து, தேர்தல் ஆணையத்துக்குக் கடிதம் அளிக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.