Last Updated : 20 Dec, 2020 05:37 PM

 

Published : 20 Dec 2020 05:37 PM
Last Updated : 20 Dec 2020 05:37 PM

எல்லைப் பிரச்சினையால் மருத்துவ இடம் கிடைக்காமல் அரசுப் பள்ளி மாணவர் பாதிப்பு; ஆசிரியர் சங்கம் உதவியுடன் உயர் நீதிமன்றத்தில் வழக்கு

தமிழக-புதுச்சேரி எல்லைப் பிரச்சினையால் அரசுப் பள்ளியில் படித்து நீட் தேர்வில் 500 மதிப்பெண் பெற்றும் மருத்துவ இடம் கிடைக்காத மாணவர் மணிகண்டன் ஆசிரியர் சங்கம் உதவியுடன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார். அத்துடன் ஆசிரியர் சங்கத்தினர் புதுச்சேரி முதல்வர், தமிழக சட்டத்துறை அமைச்சர் ஆகியோரைச் சந்தித்து மனு அளித்துள்ளனர்.

புதுச்சேரி புராணசிங்குப்பாளையம் அரசுப் பள்ளியில் இப்பகுதியை ஒட்டிய தமிழத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி ரகுபதி மகன் மணிகண்டன் படித்தார். இவர் நீட் தேர்வில் 500 மதிப்பெண்கள் பெற்றார். ஆனால், தமிழகத்தைச் சேர்ந்தவர் என்பதால், புதுச்சேரியில் மருத்துவ இடமில்லை, தமிழகப் பள்ளியில் படிக்கவில்லை என்று சுட்டிக்காட்டப்பட்டு, அம்மாணவரின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது.

இது தொடர்பாக, 'இந்து தமிழ் திசை' செய்தித்தாளில் செய்தி வெளியானது. புதுச்சேரி தனி மாநிலமாக இருந்தாலும் தமிழகப் பாடத்திட்டமே அமல்படுத்தப்பட்டும் ஏழை மாணவர் பாதிக்கப்பட்டிருந்தார்.

இதையடுத்து, புதுச்சேரி ஆசிரியர் சங்கத்தின் தலைவர் செங்கதிர், செயலாளர் சதீஷ்குமார், பொருளாளர் ரமேஷ் மற்றும் நிர்வாககள் இம்மாணவரை இன்று (டிச.20) சந்தித்தனர்.

அது தொடர்பாக அவர்கள் கூறுகையில், "புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியைச் சந்தித்தோம். மாணவர் மணிகண்டன் மருத்துவம் படிக்க உதவி செய்யக் கோரினோம். கடிதம் தந்தோம். புதுச்சேரி குடியுரிமை இல்லாததால் தமிழகத்தில் மட்டுமே விண்ணப்பிக்க இயலும், தமிழக முதல்வருக்குப் பரிந்துரை செய்வதாக முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார்.

அதைத் தொடர்ந்து, தமிழக முதல்வருக்குக் கடிதம் அனுப்பியுள்ளோம். சென்னை உயர் நீதிமன்றத்தில் மாணவர் மணிகண்டன் மூலம் வழக்குப் பதிவு செய்துள்ளோம். மாணவரின் வீடு உள்ள விக்கிரவாண்டி தொகுதி எம்எல்ஏவும், தமிழக சட்டத்துறை அமைச்சருமான சி.வி.சண்முகத்தைச் சந்தித்து மனு தந்துள்ளோம். சட்டச் சிக்கல்கள் இருந்தாலும், அதை நிவர்த்தி செய்து எனது தொகுதி மாணவருக்கு கண்டிப்பாக நல்ல தீர்வு காணப்படும் என்று அமைச்சர் கூறினார்.

நீட் தேர்வில் 500 மதிப்பெண் எடுத்த ஏழை மாணவர் மணிகண்டனுக்கு அரசுப் பள்ளி மாணவர் பிரிவில் மருத்துவம் படிக்க அரசு சேர்க்கை தர வேண்டும்" என்று தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x