Last Updated : 20 Dec, 2020 04:27 PM

 

Published : 20 Dec 2020 04:27 PM
Last Updated : 20 Dec 2020 04:27 PM

வேலூர் புதிய பேருந்து நிலையம் மே மாதத்துக்குள் பொதுமக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்படும்: மாநகராட்சி ஆணையர் தகவல்

வேலூர் புதிய பேருந்து நிலையத்தின் கட்டுமானப் பணிகளை மாநகராட்சி ஆணையர் சங்கரன் நேரில் ஆய்வு செய்தார்.

வேலூர்

வேலூர் புதிய பேருந்து நிலையத்தின் கட்டுமானப் பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு வரும் மே மாதம் பொதுமக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்படும் என, மாநகராட்சி ஆணையர் சங்கரன் தெரிவித்தார்.

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் வேலூர் புதிய பேருந்து நிலையம் ரூ.45 கோடி மதிப்பில் நவீன வசதிகளுடன் விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது. இங்கு முதல் தளத்தில் வணிக வளாகம், ஆண், பெண் கழிப்பறை வசதி, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், தானியங்கி வசதி, பயணிகள் காத்திருப்பு அறை, ஓய்வறை, வாகனங்கள் நிறுத்துமிடம் (பார்க்கிங்) உள்ளிட்ட பல்வேறு வசதிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கட்டுமானப் பணிகள் 45 சதவீதம் நிறைவடைந்துள்ளன.

இப்பணிகளை வணிகவரித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி கடந்த வாரம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பணிகளை விரைந்து முடிக்க மாநகராட்சி அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.

இந்நிலையில், புதிய பேருந்து நிலையத்தின் கட்டுமானப் பணிகளை மாநகராட்சி ஆணையர் சங்கரன் இன்று (டிச.20) காலை நேரில் ஆய்வு செய்தார்.

இதுகுறித்து, செய்தியாளர்களிடம் சங்கரன் கூறும்போது, "புதிய பேருந்து நிலையத்தின் கட்டுமானப் பணிகள் 45 சதவீதம் நிறைவு பெற்றுள்ளன. புதிய பேருந்து நிலையத்துக்கு வரும் பயணிகளுக்குத் தேவையான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டு வருகின்றன. அதேநேரத்தில், நவீன வசதிகளுடன் தரமான பேருந்து நிலையமாகவும் உருவாக்கப்பட்டு வருகிறது.

இப்பணிகள் அனைத்தும் வரும் மார்ச் மாதம் நிறைவுபெறும் என எதிர்பார்க்கிறோம். கட்டுமானப் பணிகள் முழுமையாக நிறைவடைந்து வரும் மே மாதம் பொதுமக்கள் பயன்பாட்டுக்குப் புதிய பேருந்து நிலையம் கொண்டு வர முயற்சிகள் எடுத்து வருகிறோம்" என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x