Published : 20 Dec 2020 03:49 PM
Last Updated : 20 Dec 2020 03:49 PM

மிஷன்- 200 இலக்கு; 'அதிமுகவை நிராகரிக்கிறோம்' என்ற பெயரில் கூட்டம் நடத்தி தீர்மானம் நிறைவேற்றுக: திமுகவினருக்கு ஸ்டாலின் வலியுறுத்தல்

மு.க.ஸ்டாலின்: கோப்புப்படம்

சென்னை

'அதிமுகவை நிராகரிக்கிறோம்' என்ற பெயரில் கிராமங்கள்தோறும் கூட்டம் நடத்த வேண்டும் எனத் திமுகவினரை அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.

திமுக மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகள் கூட்டம் இன்று (டிச.20) சென்னை, அண்ணா அறிவாலயத்தில் அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. தேர்தல் பணிகள், பிரச்சாரக் கூட்டங்கள் குறித்து இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் பேசியதாவது:

"தேர்தலுக்குப் பணம் முக்கியம்தான்; பணம் மட்டுமே முக்கியமல்ல! பணம் கொடுத்தால் வெற்றி பெற்றுவிடலாம் என்றால், பணம் கொடுத்த பல தேர்தல்களில் அதிமுக தோற்றும் உள்ளது. அப்படியானால் அதையே காரணமாகச் சொல்லிக் கொண்டு இருக்க முடியாது.

பணத்தைக் கொடுத்து அதிமுக வெற்றி பெற்றுவிட்டது, போலீஸை வைத்து வெற்றி பெற்றுவிட்டது என்று நாம் காரணம் சொல்ல முடியாது. ஆளும்கட்சியிடம் ஏராளமான பணம் இருக்கிறது, கொள்ளையடித்து வைத்துள்ளார்கள்.

கொள்ளையடித்துக் கொண்டும் இருக்கிறார்கள். இந்த ஆட்சியால் பயனடையும் தொழிலதிபர்கள் தங்களைக் காப்பாற்றிக் கொள்வதற்காக பணமும் கொடுப்பார்கள். இந்தப் பணமலையை உடைத்து நாம் வெற்றி பெற்றாக வேண்டும்.

பணமா, மக்கள் மனமா? என்றால் பணத்தை வெல்லும் ஆற்றல் மக்கள் மனத்துக்கு உள்ளது. மக்கள் மனதை நீங்கள் வென்றாக வேண்டும். அதற்காகத்தான் இந்தப் பிரச்சார வியூகம் வகுக்கப்பட்டிருக்கிறது.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பெற்ற மிகப்பெரிய வெற்றிக்கு 12 ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட ஊராட்சி சபைக் கூட்டங்களை நடத்தியது மிகப்பெரிய காரணம் என்று சொன்னார்கள். திமுக முன்னோடிகள், நிர்வாகிகள், மாவட்ட திமுகவைச் சேர்ந்தவர்கள், திமுக தளகர்த்தர்கள் எல்லாம் அந்தக் கூட்டங்களுக்குச் சென்று பிரச்சாரத்தில் ஈடுபட்டார்கள். அதனால்தான் மிகப்பெரிய வெற்றி கிடைத்தது. எத்தனையோ காரணங்கள் இருந்தாலும் இதுவும் ஒரு முக்கியமான காரணமாக அமைந்தது. அதனால் இன்றைக்கு ஏற்படுத்தப்பட்டிருக்கும் இந்த பிரச்சார வியூகத்தை நீங்கள் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

அதிமுக ஆட்சி, கடந்த பத்து ஆண்டுகளாக இருக்கிறது. பத்து ஆண்டுகளாக இந்த ஆட்சி மக்களுக்கு எந்த நன்மையும் செய்யவில்லை, தொகுதிக்கு எதையும் செய்யவில்லை என்ற கோபம் மக்களுக்கு நிரம்ப இருக்கிறது. அந்தக் கோபம்தான் தேர்தல் நேரத்தில் அதிகமாக வெளிப்படும். கடந்த பத்தாண்டு காலத்தில்அனைத்துத் துறைகளிலும் இந்த தமிழ்நாடு சந்தித்துள்ள அவலங்களை, சரிவுகளை, தோல்விகளை மக்களுக்கு நாம் நினைவூட்டும் பிரச்சாரத்தை உடனடியாகத் தொடங்கியாக வேண்டும்.

ஏற்கெனவே 'தமிழகம் மீட்போம்' என்று மாவட்ட அளவிலான கூட்டங்களில் நான் பங்கேற்று வருகிறேன். 'விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்' என்ற பரப்புரைக் கூட்டத்தை திமுக மகளிரணிச் செயலாளர், இளைஞரணிச் செயலாளர், அந்தியூர் செல்வராஜ் உள்ளிட்ட துணைப் பொதுச் செயலாளர்கள் உள்ளிட்ட திமுக முன்னோடிகள் ஒவ்வொரு மாவட்டங்களிலும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அடுத்ததாக, நீங்கள் இப்போது நடத்தவுள்ள பிரச்சாரம். நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் உள்ளாட்சி மன்றத் தேர்தலுக்குமுன்னதாக நீங்கள் செய்த பிரச்சாரங்கள் எப்படிப் பயன்பட்டதோ, அப்படி இந்தப் பிரச்சாரத்தையும் நீங்கள் சிறப்பாக நடத்தித் தர வேண்டும்.

அது மக்கள் மத்தியில் மிகுந்த எழுச்சியையும், திமுக மீது பலத்த நம்பிக்கையையும் ஏற்படுத்தியது. அதேபோல்தான், 'அதிமுகவை நிராகரிக்கிறோம்' என்ற இந்தக் கூட்டமும் நடத்தப்பட வேண்டும்.

இந்தக் கூட்டத்தை மாவட்டச் செயலாளர்கள், மாநகரச் செயலாளர்கள், நகர, ஒன்றிய, கிளை, பகுதிச் செயலாளர்கள் நடத்த இருக்கிறீர்கள். டிசம்பர் 23-ம் தேதியில் இருந்து தொடர்ந்து பத்து நாட்கள் உங்கள் எல்லைக்கு உட்பட்ட கிராமங்களுக்குச் சென்று மக்களைச் சந்தித்து அவர்களது குறைகளைக் கேட்டு, பிரச்சாரம் செய்ய வேண்டும்.

அந்த கிராமத்தில் 'அதிமுகவை நிராகரிக்கிறோம்' என்ற தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும். அதிமுகவை நிராகரிக்கும் எண்ணத்தோடு இருக்கும் மக்களிடம் அதை தீர்மானமாக நிறைவேற்றித் தர வேண்டிய பொறுப்பு உங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

சாலை வசதிகள் செய்து தரப்படவில்லை, குடிநீர் வசதி கிடைக்கவில்லை, பள்ளிகளில் வசதிகள் இல்லை, ஆரம்ப சுகாதார நிலையம் இல்லை, ரேஷன் கடைகள் இல்லை; கடைகள் இருந்தாலும் பொருட்கள் இல்லை, முதியோர் பென்ஷன் கிடைக்கவில்லை, அரசு உதவித்தொகை வரவில்லை, என்று அடுக்கடுக்கான கோரிக்கைகளை கிராமப்புற மக்கள் சொல்வார்கள். அவை அனைத்தையும் பொறுமையாக நீங்கள் காது கொடுத்துக் கேட்க வேண்டும்.

திமுக ஆட்சி அமைந்ததும் இக்கோரிக்கைகள் நிறைவேற்றப்படும், குறைகள் களையப்படும் என்ற நம்பிக்கையை நீங்கள் அவர்கள் மனதில் உருவாக்க வேண்டும்.

மக்கள் கேட்கும் கேள்விகளுக்கு பொறுமையாக விளக்கம் சொல்லுங்கள். திமுக ஆட்சிப் பொறுப்பில் இருந்தபோது அந்தப் பகுதிகளுக்குச் செய்த நன்மைகளை எடுத்துக் கூறுங்கள். இப்போது செய்யக்கூடிய பணிகளையும், ஆட்சிப் பொறுப்புக்கு வந்தவுடன் செய்யவுள்ள பணிகளையும் எடுத்துக் கூறுங்கள்.

ஒரு நகரச் செயலாளர் செல்லும்போது அந்த நகர திமுகவின் முக்கியப் பொறுப்பாளர்களையும் உடன் அழைத்துச் செல்லுங்கள். கிளைத் தேர்தலில் நம்மை எதிர்த்து போட்டியிட்டார் என்பதற்காக அவரை அழைக்காமல் சென்றுவிடாதீர்கள். அந்த வட்டாரத்தில் இருக்கும் சமூக ஆர்வலர்கள், மக்கள் மன்றங்கள் ஆகியோரையும் அங்கு வரவழையுங்கள்.

ஒரு ஒன்றியச் செயலாளர், அந்த ஊருக்கு பிரச்சாரத்துக்கு வருகிறார் என்றால் கிளைச் செயலாளராக இருப்பவர், ஒவ்வொரு வீடாகச் சென்று மக்களை அந்தக் கூட்டத்துக்கு அழைத்து வர வேண்டும். உங்கள் வீட்டுத் திருமணத்துக்கு அழைப்பதைப் போல, ஊர்த் திருவிழாவுக்கு அழைப்பதைப் போல அழைக்க வேண்டும். ஒவ்வொரு வாக்காளர் மனதிலும் 'அதிமுகவை நிராகரிக்கிறோம்' என்ற உணர்வை விதைக்க வேண்டும்.

அதிமுகவால் கடந்த பத்தாண்டு காலம் பாழாகிவிட்டது என்ற எண்ணத்தை விதைக்க வேண்டும். அதிமுகவுக்கு வாக்களிப்பது அவமானம் என்று மக்கள் மனதில் உருவாக்க வேண்டும். இதுதான் முதல் படி.

அதனால்தான் 234 தொகுதிகளும் உங்கள் கையில் இருக்கிறது என்று நான் சொன்னேன்!

கடந்த ஆறு மாத காலம் கரோனா பாதிப்பு காலம்! அந்த நேரத்திலும் நாம் சும்மா இல்லை! 'ஒன்றிணைவோம் வா' என்ற திட்டத்தின் கீழ் லட்சக்கணக்கான மக்களுக்கு ஏராளமான உதவிகளைச் செய்தோம்.

கரோனா என்ற கொடிய வைரஸ் பரவிவரும் காலமாக இருந்தாலும், 'ஒன்றிணைவோம் வா' திட்டத்தைப் பயன்படுத்தி லட்சக்கணக்கான மக்களுக்கு ஏராளமான உதவிகளைச் செய்திருக்கிறோம். உயிரையே பணயம் வைத்து பணியாற்றிய உங்களுக்கு நன்றி. அப்படிப்பட்ட பணிகளைச் செய்த நீங்கள், இந்தப் பணியையும் வெற்றிகரமாகச் செய்வீர்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு உண்டு.

'விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்' என்ற பிரச்சாரத்தை 20க்கும் மேற்பட்ட தலைமைக் கழக நிர்வாகிகள் நடத்தி வருகிறார்கள். அனைத்து இடங்களிலும் மக்கள் தரும் வரவேற்பு தருகிறார்கள்.

காணொலி மூலமாக 'தமிழகம் மீட்போம்' என்ற எனது பிரச்சாரக் கூட்டங்கள் மிகுந்த எழுச்சியோடு நடந்து வருகின்றன.

யாருடன் கூட்டணி, யாருக்கு எத்தனை தொகுதி, என்னென்ன தொகுதி, யார் வேட்பாளர், என்பதை எல்லாம் தலைமை முடிவு செய்துகொள்ளும். வெற்றி பெறக்கூடியவர்கள்தான் வேட்பாளர்கள். உங்களிடம்நாங்கள் எதிர்பார்ப்பது, 'வெற்றி' என்ற ஒற்றை வார்த்தைதான்!

அந்த வெற்றிக்கான சூத்திரங்களை மட்டும் பயன்படுத்துங்கள்! எந்த வாக்குப்பெட்டியைத் திறந்தாலும் உதயசூரியன் உதிக்க வேண்டும். அப்படி ஒரு நிலையை உருவாக்க உங்களால் முடியும். உங்களால் மட்டுமே முடியும்!

அதிமுகவை நிராகரிக்க வைப்போம்! திமுகவை ஆட்சியில் அமர வைப்போம்!

நம்முடைய இலக்கு 200 தொகுதிகளுக்கு மேல்தான் என்று நாம் உறுதி எடுத்தாக வேண்டும். 'மிஷன் - 200' என்ற இலக்கை நோக்கி நாம் சென்றாக வேண்டும். 200க்கு ஒரு தொகுதி அல்ல; ஒரு இஞ்ச் கூட குறையக் கூடாது!

இன்று முதல் ஒவ்வொரு 24 மணி நேரமும் உழைத்தால்தான் 200க்கும் மேல் என்பது சாத்தியம்.

நம்மால் முடியும்! நம்மால் மட்டும்தான் முடியும்!".

இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x