Published : 20 Dec 2020 03:28 PM
Last Updated : 20 Dec 2020 03:28 PM

திமுகவை எதிர்கொள்ள முடியாமல் சிலரைக் கட்டாயப்படுத்தி கட்சி தொடங்க வைக்கிறார்கள்: ஸ்டாலின் விமர்சனம்

திமுகவை எதிர்கொள்ள முடியாமல், சிலரைக் கட்டாயப்படுத்தி கட்சி தொடங்க வைக்கிறார்கள் என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திமுக மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் இன்று (டிச.20) சென்னை, அண்ணா அறிவாலயத்தில் அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. 2021 சட்டப்பேரவைத் தேர்தல் பணிகள் குறித்து இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் ஸ்டாலின் பேசியதாவது:

"மிக மிக முக்கியமான காலகட்டத்தில் நாம் இந்தக் கூட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறோம். இந்த அரங்கத்தில் 1,659 பேர் கூடியிருக்கிறீர்கள். உங்கள் கையில்தான் 234 தொகுதிகளும் அடங்கி இருக்கிறது. அதனால்தான் இதை மிக மிக முக்கியமான பொதுக்கூட்டம் என்றேன்.

234 தொகுதிகளின் வெற்றி உங்கள் கரங்களில் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. அதைச் சொல்வதற்காகத்தான் உங்களை நான் இன்று இங்கு அழைத்திருக்கிறேன்!

நம்மைத் தாண்டி நமக்கு இரண்டு பலம் இருக்கிறது. அதுதான் அண்ணா! கருணாநிதி! அவர்கள் இருவரும் நம்மை எல்லாம் நமக்குள்ளே இருந்து உணர்வால், ரத்தத்தால் இயக்கிக் கொண்டு இருக்கிறார்கள்.

அண்ணா அறிவாலயத்தில், கலைஞர் அரங்கத்தில், திமுகவின் இதயமாக விளங்கக்கூடிய மாவட்ட, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் செயலாளர்களும் சட்டப்பேரவை உறுப்பினர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்துகொண்டுள்ள இந்தக் கூட்டத்தின் மூலமாக நான் சொல்ல விரும்புவது, 'அடுத்து அமையப் போவது நமது ஆட்சிதான்! நம்மால்தான் தமிழகத்தை வெல்ல முடியும்! நம்மால்தான் தமிழகத்தை ஆள முடியும்! நம்மால்தான் தமிழகத்துக்குச் சிறப்பான திட்டங்களை சாதனைகளைப் படைத்திட முடியும்! அதில் யாருக்கும் எந்தச் சந்தேகமும் வேண்டாம்!'.

வெற்றியைச் சாதாரணமாக அடைந்துவிட முடியாது

பொதுக்குழுவாக இருந்தாலும், செயற்குழுவாக இருந்தாலும், மாவட்டச் செயலாளர் கூட்டமாக இருந்தாலும் ஒரு கருத்தை நான் திரும்பத் திரும்பச் சொல்லி வருகிறேன்; 'நாம் தான் வெற்றி பெறுவோம்! ஆனால் அந்த வெற்றியைச் சாதாரணமாக அடைந்துவிட முடியாது' என்று சொல்லி வருகிறேன்.

மந்திரத்தால் மாங்காய் பழுத்துவிடாது என்பதைப் போல, நாம் சாதாரணமாக வென்றுவிட முடியாது. அதற்கான உழைப்பை, அதற்கான செயலை, அதற்கான பிரச்சாரத்தை, நாம் எந்த அளவுக்கு முடுக்கிவிடுகிறோமோ, அந்த அளவுக்கு நம்முடைய வெற்றியை முழுமையாக அடைவோம்!

உங்களது உழைப்பை முழுமையாகப் பயன்படுத்துங்கள். அப்படிக் கொடுத்தால் மட்டுமே முழு வெற்றியைப் பெற முடியும்!

திமுக ஆட்சி மலர வேண்டும்

ஒரு கட்சி, ஆட்சி அமைக்க 117 இடங்கள்தான் தேவை. 117 இடத்தை மட்டுமே பெறுவதற்காக நாம் தேர்தலைச் சந்திக்கவில்லை. 117 இடங்களுக்காக நாம் கட்சி நடத்தவில்லை. அது பெருமை அல்ல.

அண்ணாவின் மறைவுக்குப் பிறகு நடைபெற்ற 1971-ம் ஆண்டு தேர்தலில், தலைவர் கருணாநிதி தலைமையேற்று நடத்திய அந்தத் தேர்தலில் 184 இடங்களில் வெற்றி பெற்று ஒரு பெரும் சரித்திரச் சாதனையை நாம் படைத்தோம். அந்த வெற்றியை நாம் அடைய வேண்டும்!

1996-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் நாம் அடைந்த வெற்றியை அடைய வேண்டும்! 2004-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் நாம் அடைந்த வெற்றியை அடைய வேண்டும்!

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஒரே ஒரு தொகுதி நீங்கலாக அனைத்துத் தொகுதிகளிலும் வென்றோம் அல்லவா, அந்த வெற்றியைப் பெற வேண்டும். அதுதான் உண்மையான வெற்றி. அதுதான் முழுமையான வெற்றி!

அத்தகைய முழுமையான வெற்றியைப் பெறுவதற்கு என்ன வழியோ அதை நீங்கள் செய்யவேண்டும். அத்தகைய முழு வெற்றியை அடைய எப்படிச் செயல்பட வேண்டுமோ அப்படிச் செயல்பட வேண்டும்.

அதற்கு உங்கள் அனைவருக்கும் ஒரே ஒரு பொது நோக்கம்தான் இருக்க வேண்டும். யார் வேட்பாளர்? உதயசூரியன்தான் வேட்பாளர்! யார் வேட்பாளர்? கருணாநிதிதான் வேட்பாளர்!, என்ற ஒற்றை எண்ணம்தான் உங்களுக்கு இருக்க வேண்டும்!

200 பேர் சட்டப்பேரவை உறுப்பினராவதற்கும் 30 பேர் அமைச்சராவதற்குமான தேர்தல் அல்ல இது! அப்படி நினைத்தால் அதை மறந்துவிடுங்கள்! திமுக ஆட்சி மலர வேண்டும், அதுதான் கொள்கையாக இருக்க வேண்டும்!

உங்கள் அனைவரது எண்ணமும், இன்னாருக்கு உழைக்கிறோம், அவர் தானே எம்எல்ஏ ஆகப் போகிறார், இவர்தானே அமைச்சர் ஆகப் போகிறார், நமக்கென்ன என்று நினைக்காதீர்கள்!

திமுக ஆட்சிக்கு வந்தாக வேண்டும்! கருணாநிதியின் கனவு நிறைவேற வேண்டும்! கருணாநிதியின் தொண்டர்கள் நாம் என்பதை நிரூபித்தாக வேண்டும்!, அதற்காக நான் உழைக்கிறேன், என்கிற எண்ணம் உங்கள் அனைவருக்கும் வர வேண்டும்!

நான் வெற்றி பெற்றால் போதும் என்று நினைக்காமல், நம்மைச் சுற்றி இருப்பவர்களும் சேர்ந்து வெற்றி பெற வேண்டும் என்று அனைவரும் நினைத்தால் மட்டுமே நாம் ஆட்சிக்கு வர முடியும்!

ஒரு கை, ஓசையாகாது. தனிமரம் தோப்பாகாது. தனி வீடு ஊர் ஆகாது. தனி மனிதன் குடும்பம் ஆகமாட்டான்! 'நான்' என்பதை விடுங்கள்! 'நாம்' என மாறுங்கள்! நிச்சயம் நாம் வெற்றி பெற முடியும்!

பொதுவாகச் சிலர் பேசும்போது, வாழ்வா சாவா என்பது மாதிரி என்று சொல்வார்கள். அந்த உதாரணமே தவறானது என்பது என் கருத்து! வாழ்வதற்காகத்தான் அனைவரும் முயல்கிறார்கள். வாழ்வா சாவா என்பது முயலாதவர்கள் சொல்லும் சமாதானம். தமிழகத்தை வாழ வைப்பதற்கான தேர்தல் இது!

ஐந்து முறை ஆட்சியில் இருந்தோம் என்று பெருமைபடச் சொல்கிறோம். உண்மைதான். ஆறாவது முறையும் நாம்தான் ஆட்சிக்கு வந்தோம் என்ற பெருமையைப் பெற்றாக வேண்டும்!

இந்தத் தேர்தலில் நாம் அடைய இருக்கிற வெற்றி என்பது, இதுவரை ஐந்து முறை பெற்ற வெற்றிக்குச் சமம்! இதன் உண்மையான பொருளை நீங்கள் அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்! ஐந்து முறை வெற்றி பெற்றதற்குச் சமம்தான் இப்போது அடையப் போகும் வெற்றி. அதனை நீங்கள் அனைவரும் உணர்ந்து செயல்பட வேண்டும்!

சிலரைக் கட்டாயப்படுத்தி கட்சி தொடங்க வைக்கிறார்கள்

மத்தியில் பாஜக ஆட்சி, அதன் அதிகார பலம் ஒரு பக்கம்! மாநிலத்தில் அதிமுக ஆட்சி, அதன் பண பலம் மறுபக்கம்!

இது ஒன்றும் நமக்குப் புதிதல்ல; இவற்றை எதிர்கொண்டுதான் ஆகவேண்டும். ஒவ்வொரு தேர்தலிலும் இதுபோல ஏதாவது புதுப்புது அஸ்திரங்களை நாம் எதிர்கொண்டுதான் வருகிறோம். நம்மை எதிர்கொள்ள முடியாமல் புதிது புதிதாக பலரை உருவாக்குகிறார்கள். சிலரைக் கட்டாயப்படுத்தி கட்சி தொடங்க வைக்கிறார்கள். எல்லாச் சதிகளையும் செய்கிறார்கள். தேர்தல் நெருக்கத்தில் எதை வேண்டுமானாலும் செய்வார்கள்.

இப்படி தாக்குதல் நடத்துகிறார்களே என நாம் பலவீனம் ஆகிவிடக்கூடாது. சோர்ந்துவிடக் கூடாது. மேலும் மேலும் உழைக்க வேண்டும். ஆறாவது முறை வெற்றி பெறுவதற்கு அனைவரும் ஆறு மடங்கு உழைக்க வேண்டும்.

கருணாநிதி சொல்வாரே, 'உண்மையான வீரனுக்குத் தெரியவேண்டியது கிளியின் கழுத்துதானே தவிர, கிளியல்ல, கிளையல்ல, மரமல்ல!'.

அர்ஜூனன் வைத்த குறி தப்பாது என்பதைப் போல, திமுகவினர் வைத்த குறி தப்பாது என்பதை நாம் நிரூபித்தாக வேண்டும்.

மிதப்பு கூடாது

கடந்த தேர்தலிலேயே நாம்தான் வெற்றி பெற்றிருக்க வேண்டும். நமக்கும் அவர்களுக்கும் ஒரு சதவிகிதம்தான் வித்தியாசம். ஒரு சதவிகித வித்தியாசத்திலேயே ஆட்சிக்கு வர முடியாத நிலைமை ஆகிவிட்டது. நாம் வெற்றி பெற்றுவிடுவோம் என்ற மிதப்பு இருந்தது. அதனால்தான் சில தொகுதிகளை இழக்க வேண்டியதாயிற்று. அத்தகைய மிதப்பு கூடாது. நமக்குள்ளே உள்ள மாறுபாடுகள், வேறுபாடுகள், சண்டைகள், சச்சரவுகளைக் களையுங்கள். அதுவே வெற்றிக்கு முதல் அடித்தளம்.

'திமுகவை யாரும் வீழ்த்த முடியாது, திமுகவினர் தான் வீழ்த்த முடியும்' என்று அண்ணா சொன்னார். அதற்கு என்ன காரணம்? உட்பகை!

நாம் அனைவரும் அண்ணாவின் தம்பிகள், கருணாநிதியின் தொண்டர்கள், கருப்பு சிவப்பின் காவலர்கள், உதயசூரியனின் ஒளிவிளக்குகள்! இவை தான் நமக்குள்ள ஒற்றுமை. இதுதான் நம்மை இந்த அரங்கத்துக்குள் உட்கார வைத்துள்ளது.

குற்றச்சாட்டுகள் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும்

உங்களில் பலர் சட்டப்பேரவை உறுப்பினர் ஆகலாம்! உங்களில் சிலர் எம்எல்ஏ ஆகலாம்! ஆனால் இந்தப் பெருமைகள் தனிப்பட்ட உங்களால் மட்டும் ஆனது அல்ல. சட்டப்பேரவையின் படிக்கட்டை மிதிக்காமல், அண்ணா அறிவாலயத்துக்கே வராமல் ஏதோ ஒரு குக்கிராமத்தில், ஏதோ ஒரு குடிசையில் வாழ்ந்துகொண்டு திமுகவை அவரது கிளையில் வளர்த்து வைத்திருக்கிறானே ஒரு தொண்டன், அவனை நீங்கள் மதிப்பதாக இருந்தால் அவனது உழைப்புக்கு நீங்கள் மரியாதை செலுத்துவதாக இருந்தால், திமுக நிர்வாகிகள் உங்களுக்குள் உள்ள வேறுபாடுகள், மாறுபாடுகளை இன்றோடு, இந்த இடத்தோடு, இந்த நொடியோடு விட்டுவிடுங்கள்.

கெட்டுப் போன நிலத்தில் எந்தப் பயிரும் எப்படி முளைக்காதோ, அதுபோல மனமாச்சர்யங்கள் உள்ள மனம் கொண்டவர்களால் அடுத்தவருக்காக உழைக்க முடியாது. எல்லோரும் எல்லோருக்காகவும் உழைத்தால் மட்டுமே நாம் ஆட்சிக்கு வர முடியும்!

நம்மவர்களே நம்மவர்களை வீழ்த்த நினைத்தால், அது உண்ட வீட்டுக்குச் செய்யும் துரோகம்! இவர்களைத்தான் திமுகவின் புற்றுநோய் என்று தலைவர் கருணாநிதி சொன்னார்.

சொந்தக் கட்சிக்கு துரோகம் செய்து, ஆளும்கட்சிக்கு அனுசரனையாக இருப்பவர்கள், அதைவிட மோசமானவர்கள். இது போன்ற குற்றச்சாட்டுகள் வராமல் நாம் பார்த்துக் கொள்ள வேண்டிய கடமை அனைவருக்கும் உண்டு!

இந்தத் தேர்தலில் அதிமுக அமைச்சர்கள் அனைவரும் தோற்கடிக்கப்பட வேண்டும். தற்கால வீயூகங்களை நாங்கள் அமைத்திருந்தாலும்; நீங்களும் அதற்கான தனி வியூகங்களை அமைத்திட வேண்டும். இவர்கள் நிற்கும் தொகுதியில் பணம் அதிகம் விளையாடும். அதனை நாம் நமது பலத்தால் வெல்ல வேண்டும்".

இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x