தமிழகக் கோயில் திருவிழாக்களில் நாட்டுப்புற நிகழ்ச்சி நடத்தத் தேர்தல் ஆணையம் அனுமதிக்க வேண்டும்: நாட்டுப்புறக் கலைஞர்கள் சங்கம் வலியுறுத்தல்

புதுக்கோட்டையில் நடைபெற்ற நாட்டுப்புற மேடை கலைஞர்கள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டத்தில் பேசிய மாநிலச் செயலாளர் 'ஆக்காட்டி' ஆறுமுகம்.
புதுக்கோட்டையில் நடைபெற்ற நாட்டுப்புற மேடை கலைஞர்கள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டத்தில் பேசிய மாநிலச் செயலாளர் 'ஆக்காட்டி' ஆறுமுகம்.
Updated on
1 min read

தொடர்ந்து 3 ஆண்டுகளாகப் பல்வேறு வகையில் நாட்டுப்புற மேடைக் கலைஞர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், அடுத்த ஆண்டும் பாதிக்கப்படாத வகையில், சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்படும் சமயத்திலும் நாட்டுப்புற நிகழ்ச்சி நடத்துவதற்கு தேர்தல் ஆணையம் அனுமதிக்க வேண்டும் என அச்சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

புதுக்கோட்டையில் தமிழ்நாடு நாட்டுப்புற மேடைக் கலைஞர்கள் சங்கத்தின் 5-வது பொதுக்குழுக் கூட்டம் இன்று (டிச.20) நடைபெற்றது.

கூட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்டச் செயலாளர் முருகையா தலைமை வகித்தார். பொதுக்குழு தீர்மானங்களை விளக்கி சங்கத்தின் மாநிலச் செயலாளர் 'ஆக்காட்டி' ஆறுமுகம் பேசியதாவது:

"கடந்த 2018-ல் கஜா புயலால் புதுக்கோட்டை மாவட்டம் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. இதனால், அந்த ஆண்டு எங்களது நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சிகளை நடத்த முடியாமல் போனதால் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து, 2019-ல் மக்களவைத் தேர்தல், நிகழாண்டு கரோனா பாதிப்பு எனத் தொடர்ந்து 3 ஆண்டுகளாகக் கலைஞர்கள் கடுமையான பாதிப்புகளைச் சந்தித்துள்ளனர்.

இந்தச் சூழ்நிலையில், தமிழகம் முழுவதும் உள்ள 3 லட்சத்து 50 ஆயிரம் கலைஞர்களில் கலைப் பண்பாட்டுத் துறையின் மூலம் நலவாரியத்தில் பதிவு செய்த சுமார் 34 ஆயிரம் பேருக்கு மட்டுமே கஜா புயலின்போது தலா ரூ.2,000, கரோனா பாதிப்புக்காக தலா ரூ.2,000 நிவாரணமாக அரசு வழங்கியது.

மொத்தக் கலைஞர்களில் 10 சதவீதம் பேருக்கு மட்டுமே நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. எனவே, விடுபட்டுள்ள அனைவரையும் நலவாரியத்தில் சேர்ப்பதற்குத் தமிழக அரசு சிறப்பு முகாம்களை நடத்த வேண்டும்.

மேலும், 2021-ல் தமிழகத்தில் கோயில்களில் திருவிழா நடைபெறும் சமயத்தில் சட்டப்பேரவைத் தேர்தலும் நடைபெற உள்ளது. தேர்தல் ஆணையத்தின் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தால் கலை நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு கடும் கட்டுப்பாடு விதிக்கப்படும். ஏற்கெனவே, நாங்கள் தொடர்ந்து 3 ஆண்டுகளாக வாழ்வாதாரத்தை இழந்துவிட்டோம். இனிமேல் இழப்பதற்கு எங்களிடம் ஒன்றுமில்லை. எனவே, இரவு ஒரு மணிவரை திருவிழாக்களில் கலை நிகழ்ச்சி நடத்துவதற்கு தேர்தல் ஆணையம் அனுமதிக்க வேண்டும்.

நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு அலுவலகம் செயல்படுத்துவதற்குத் தமிழக அரசு இடம் ஒதுக்கித் தர வேண்டும்".

இவ்வாறு 'ஆக்காட்டி' ஆறுமுகம் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in