

மத்திய, மாநில அரசுகள் தமிழக மீனவர்கள் மீதான இலங்கைக் கடற்படையின் அத்துமீறலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக, ஜி.கே.வாசன் இன்று (டிச.20) வெளியிட்ட அறிக்கை:
"புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்பட்டு இருப்பது, மிகவும் கண்டிக்கத்தக்கது.
கடந்த வாரம் 20க்கும் மேற்பட்ட மீனவர்களைக் கைது செய்ததோடு மட்டுமல்லாமல் அவர்களின் படகுகளையும் இலங்கைக் கடற்படை கைப்பற்றியது. இந்த அத்துமீறல் இன்றும் தொடர்கதையாகி வருகிறது. இது மிகுந்த வருத்தத்துக்குரியது.
மத்திய, மாநில அரசுகள் மீனவர்களின் மத்தியில் ஏற்பட்டு இருக்கும் அச்சத்தைப் போக்கி, வருங்காலங்களில் நம்பிக்கை ஏற்படும் வகையில், அவர்களின் வாழ்வாதாரத்திற்கு எந்தவித பங்கமும் ஏற்படாதாவறு காக்க வேண்டும்.
மத்திய அரசு இனிமேலும் தாமதம் இல்லாமல் இலங்கை அரசுடன் பேசி தமிழக மீனவர்களை மீட்க வேண்டும். அதோடு, இந்த அத்துமீறல்கள் மேலும் தொடராமல் இருக்க பேச்சுவார்த்தையின் மூலம் நிரந்தரத் தீர்வு காண வேண்டும்".
இவ்வாறு ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.