Published : 20 Dec 2020 03:13 AM
Last Updated : 20 Dec 2020 03:13 AM

தமிழ் ஆய்வை மேம்படுத்தும் கேள்விகளை எழுப்பியவர் அலெக்ஸாந்தர் துப்யான்ஸ்கி- காணொலி அஞ்சலி நிகழ்ச்சியில் ரவிக்குமார் எம்.பி தகவல்

அலெக்ஸாந்தர் துப்யான்ஸ்கி

சென்னை

தமிழ் ஆய்வை மேம்படுத்தும் கேள்விகளை எழுப்பியவர் ரஷ்யதமிழறிஞர் பேராசிரியர் அலெக் ஸாந்தர் துப்யான்ஸ்கி என்று நாடா ளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் தெரிவித்தார்.

ரஷ்ய நாட்டைச் சேர்ந்த தமிழ்அறிஞர் பேராசிரியர் அலெக்ஸாந்தர் துப்யான்ஸ்கி கடந்த நவ.18-ம் தேதி காலமானார். இதையொட்டி சென்னையில் உள்ள ரஷ்ய அறிவியல் - கலாச்சார மையம், இந்திய - ரஷ்ய தொழில் வர்த்தக சபை சார்பில் காணொலி வழி அஞ்சலிக் கூட்டம் கடந்த 17-ம் தேதி நடைபெற்றது.

இக்கூட்டத்தில், விழுப்புரம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளருமான து.ரவிக்குமார் பேசியதாவது:

2010-ம் ஆண்டு அன்றைய தமிழக முதல்வர் கருணாநிதி, கோவையில் நடத்திய உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில், துப்யான்ஸ்கி முன்வைத்த ஆய்வுக் கட்டுரையில் தொல்காப்பியத்துக்கும் சங்க இலக்கியத்துக்கும் இடையிலான முரண்பாடுகளைச் சுட்டிக்காட்டினார்.

விடைகாண வேண்டிய கேள்விகள்

அதன்மூலம் சங்க இலக்கிய நூல்கள் தொல்காப்பியத்தை மட்டும் பின்பற்றி எழுதப்பட்டனவா? அல்லது அவற்றுக்கு வேறு ஏதேனும் இலக்கண நூல்கள் இருந்தனவா? என்ற கேள்வியை எழுப்பினார். இதுபோல் விடை காணப்பட வேண்டிய பல முக்கியமான கேள்விகளை அவர் தன் ஆய்வு அறிக்கையின் மூலம் முன்வைத்தார். அவற்றுக்கு விடை கண்டறிந்துதமிழ் ஆராய்ச்சியை மேலும் வலுவடையச் செய்வதே துப்யான்ஸ்கிக்கு செலுத்தக் கூடிய சிறந்த அஞ்சலியாக இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து, திராவிடர் கழகத்தின் தலைவரும் பெரியார் - மணியம்மை பல்கலைக்கழகத்தின் வேந்தருமான கி.வீரமணி பேசும்போது,“துப்யான்ஸ்கி தமிழின் மேன்மையை சர்வதேச அறிஞர்களுக்கும் பேராசிரியர்களுக்கும் கொண்டு சேர்த்த கலாச்சாரத் தூதர்.

திராவிடவியல், தமிழ் மொழியியல் ஆகியவற்றுக்கான ஆய்வுக்கு மிக முக்கியமான பங்களிப்புகளை ஆற்றியவர். புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் சொன்னதுபோல் தமிழ்த் தொண்டு செய்தவர் சாவதில்லை. அந்த வகையில் துப்யான்ஸ்கிக்கும் என்றும் மரணமில்லை’’ என்றார்.

தென்னிந்திய ரஷ்ய கூட்டமைப்பின் தலைமைத் தூதர் ஒலெக் அவ்தீவ் பேசும்போது, “ரஷ்ய மாணவர்களுக்கு தமிழ் கற்பிப்பதற்காக தன் வாழ்வின் பெரும்பகுதியை செலவிட்டவர் துப்யான்ஸ்கி. அவருடைய மாணவர்கள் பலர் ரஷ்யகூட்டமைப்பில் அங்கம் வகிக்கின் றனர்” என்றார்.

ஆசியக் கல்வி மையத்தின் நிறுவன இயக்குநர் மற்றும் செயலாளர் ஜான் சாமுவேல் பேசும்போது, “ரஷ்யாவில் தமிழ் பாரம்பரியத்துக்கான தூதராகவும் தமிழகத்தில் ரஷ்ய பாரம்பரியத்துக்கான தூதராகவும் செயல்பட்டார்” என்றார்.

சென்னையில் சிலை

‘பிரம்மோஸ் ஏரோஸ்பேஸ்’நிறுவனரும் தலைமை இயக்குநருமான சிவதாணுப்பிள்ளை பேசும்போது, “மாஸ்கோ பல்கலைக்கழகத்தில் நான் துப்யான்ஸ்கியை சந்தித்தேன். மாஸ்கோபல்கலைக்கழகத்தில் திருவள்ளுவர் சிலையை நிறுவ விரும்பினார். ஆனால் அது நிறைவேறவில்லை. தமிழுக்குத் தொண்டாற்றிய வெளிநாட்டு அறிஞர்களான ஜி.யு.போப், வீரமாமுனிவர் ஆகியோரைப் போல் துப்யான்ஸ்கியின் சிலையும் சென்னையில் வைக்கப்பட வேண்டும்” என்றார்.

இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய இந்திய - ரஷ்ய தொழில்வர்த்தக சபையின் செயலாளர் பி.தங்கராஜ் பேசும்போது, ‘‘துப்யான்ஸ்கிக்கு கலைமாமணி விருது வழங்கி கவுரவிக்க வேண் டும்’’ என்று தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x