Published : 20 Dec 2020 03:14 AM
Last Updated : 20 Dec 2020 03:14 AM

சென்னை அரசு பொது மருத்துவமனையில் கைவிடப்பட்ட நோயாளிகளுக்கு தனி பிரிவு: அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்

சென்னை

குடும்பத்தினரால் கைவிடப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து கண்காணிக்க சென்னை அரசு பொது மருத்துவமனையில் மறுவாழ்வு மையத்தை சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்.

சென்னை அரசு பொது மருத்துவமனையில் முதியோர் பாதுகாப்பு நலன் மற்றும் முதியோர்கள் பராமரிப்பாளர்களுக்கான கையேடு வெளியிடும் நிகழ்ச்சிநேற்று நடைபெற்றது. அமைச்சர் சி.விஜயபாஸ்கர் கலந்து கொண்டு கையேட்டை வெளியிட்டார்.

வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த40 வயது பெண் கட்டிட வேலைசெய்யும் போது உயரத்தில் இருந்துதவறி விழுந்து பல உள்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். சிகிச்சைக்கு பிறகு குணமடைந்த அவரிடம் நலம் விசாரித்த அமைச்சர், சிகிச்சை அளித்த மருத்துவர்களை பாராட்டினார்.

மேலும், மருத்துவமனையில் 40 படுக்கை வசதிகள் கொண்ட ஆதரவற்றவர்களுக்கான மறுவாழ்வு மையம் மற்றும் புற்றுநோயாளிகளுக்கான குணமளிக்கும் பூங்காவை திறந்து வைத்தார். மருத்துவக் கல்வி இயக்குநர் நாராயணபாபு, மருத்துவமனை டீன் தேரணிராஜன் உடன் இருந்தனர். அப்போது அமைச்சர் சி.விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

முதல்முறையாக இந்த மருத்துவமனையில், குடும்பத்தினரால் கைவிடப்பட்ட நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை அளித்து, அவர்களை கண்காணிக்கும் வகையில் புதிதாக மறுவாழ்வு மையம் திறக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா தொற்று பாதிப்பு 2 சதவீதத்துக்கும் கீழ் உள்ளது. மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கு தமிழக அரசு நிலம் கொடுத்துள்ளது. நிலம் கொடுக்காமல் எப்படி சுற்றுச்சுவர் கட்ட முடியும். ரூ.7.5 கோடி செலவில் சுற்றுச்சுவர் கட்டும் பணியும் நிறைவடைந்துள்ளது. கரோனா தொற்று பேரிடர் காலம் என்பதால், ஜப்பான் நிறுவனம் தமிழகத்துக்கு வந்து பார்வையிட்டு, நிதியை வழங்குவதில் சற்று தாமதம் ஆகி உள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x