

தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தொடங்கியதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வழக்கமாக தொடங்குவதை விட ஒரு வாரம் தாமதமாக இந்த ஆண்டு பருவமழை தொடங்கியது. இந்த ஆண்டு வழக்கத்தைவிட அதிக மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வடகிழக்கு பருவமழையின் போது தமிழகம், ஆந்திரம், ராயலசீமா உள்ளிட்ட பகுதிகளில் பெருமளவும், கர்நாடகா, கேரளா உள்ளிட்ட பகுதிகளில் ஓரளவும் மழை பெய்யும். தமிழகத்துக்கு 48 சதவீத மழை கிடைப்பது இந்த பருவத்தில்தான்.
வடகிழக்கு பருவமழை தொடக் கத்தின் காரணமாக அடுத்த 2 நாட்களுக்கு தமிழகம், புதுச்சேரி, ஆந்திர, கேரளாவின் கடலோர மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும். உள் மாவட்டங்களில் ஆங்காங்கே கன மழை பெய்யும். அதன் பிறகு மழை படிப்படியாக அதிகரிக்கும்.
கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை அக்டோபர் 18-ம் தேதி தொடங்கியது. பருவமழை முடிவில் 2 சதவீதம் குறைவாக மழை பெய்திருந்தது. ஆனால் இந்த ஆண்டு தென் இந்திய பகுதியில் பருவ மழையின்போது வழக்கத்தை விட 11 சதவீதம் அதிகமாக பெய்யும் எனவும், குறிப்பாக தமிழகத்தில் 12 சதவீதம் அதிகமாக பெய்யும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.ஆர்.ரமணன் கூறியதாவது:
கடலோர மாவட்டங்களில் பல இடங்களில் மழை பெய்துள்ள தால் வடகிழக்கு பருவ மழை தொடங்கியுள்ளதாக அறிவிக்கப்படுகிறது. இந்த ஆண்டு பருவமழை இயல்பான நிலையில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கையை ஒட்டிய தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் உருவாகிய காற்றழுத்த தாழ்வு பகுதி அதே இடத்திலேயே நீடிக்கிறது. அடுத்த 2 நாட்களுக்கு கடலோர மாவட்டங்களில் கன மழை பெய்யும். உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மழை பெய்யும். இவ்வாறு அவர் கூறினார்.
சென்னையில் மழை
சென்னையின் நேற்று பல பகுதிகளில் மழை பெய்துள்ளது. நகரின் அனைத்து பகுதிகளிலும் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. புறநகர் பகுதிகளான பெருங்களத்தூர், தாம்பரம் மட்டுமல்லாமல் பழவந்தாங்கல், நங்கநல்லூர், கிண்டி, பரங்கிமலை, ஈக்காட்டுத்தாங்கல் ஆகிய பகுதிகளில் காலையிலேயே நல்ல மழை பெய்தது. எனினும் நகரின் மற்ற பகுதிகளில் லேசான தூறல் மட்டுமே இருந்தது.
வல்லத்தில் 9 செ.மீ.
தமிழகத்தில் தஞ்சாவூர் மாவட் டம் வல்லத்தில் 9 செ.மீ., காஞ்சிபுரம் மாவட்டம் தாம்பரம், கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் 7 செ.மீ., திருவள்ளூர் மாவட்டம் செம்பரம்பாக்கத்தில் 5 செ.மீ., திருநெல்வேலி மாவட்டம் பாப நாசம், அரியலூர் மாவட்டம் செந்துறை மற்றும் அரியலூர் ஆகிய இடங்களில் 4 செ.மீ., காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்ல புரம், கிருஷ்ணகிரி, ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம், தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு, திருச்சி மாவட்டம் துவாக்குடி, கன்னியாகுமரி மாவட்டம் மயிலாடி, சேலம் மாவட்டம் மேட்டூர் ஆகிய பகுதிகளில் 3 செ.மீ. மழை நேற்று முன் தினம் பெய்துள்ளது.