

தமிழகத்தில் வரும் 27-ம் தேதி தொடங்க உள்ள லாரிகள் வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு 120-க்கும் மேற்பட்ட சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன. மொத்தம் 8 லட்சம் இலகு, கனரக சரக்கு வாகனங்கள் இயங்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையை அடுத்துள்ள அயனம்பாக்கத்தில் மாநில லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் குமாரசாமி தலைமையில் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், சங்கத்தின் செயலாளர் வாங்கிலி, துணைத் தலைவர் ராஜி உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
பின்னர், வேலைநிறுத்தம் தொடர்பாக மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனத் தலைவர் குமாரசாமி, அகில இந்திய மோட்டார் போக்குவரத்து காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் எஸ்.யுவராஜ் ஆகியோர் கூறியதாவது:
அனைத்து வகை லாரிகளுக்கான வேக கட்டுப்பாட்டு கருவி, ஒளிரும் பட்டை ஆகியவற்றை குறிப்பிட்ட சில நிறுவனங்களில் மட்டுமே வாங்க வேண்டும் என்று தமிழக அரசு வலியுறுத்துகிறது. சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் அந்த கருவிகளை பல மடங்கு விலை உயர்த்தி விற்கின்றன.
எனவே, மத்திய அரசு அனுமதிஅளித்துள்ள அனைத்து நிறுவனங்களிலும் இக்கருவிகளை வாங்க அனுமதிக்கவேண்டும். அதிக பாரம் ஏற்றுவது தொடர்பாக நாடு முழுவதும் ஒரேவிதிமுறைகளை பின்பற்ற வேண்டும்.டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்தநடவடிக்கை எடுக்க வேண்டும் என்பனஉள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகத்தில் காலவரையற்ற லாரிகள் வேலைநிறுத்தப் போராட்டம் வரும் 27-ம் தேதி முதல் நடத்தப்பட உள்ளது.
தமிழகத்தில் இதுவரை 120-க்கும்மேற்பட்ட சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன. சுதந்திர வாடகை வாகன உரிமையாளர், ஓட்டுநர் சங்கம் உட்பட பல்வேறு சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் நேரில் வந்து ஆதரவு தெரிவித்துள்ளனர். இதனால், 8 லட்சம்இலகு மற்றும் கனரக சரக்கு வாகனங்கள் நிறுத்தப்பட உள்ளன.