

புதுச்சேரியில் ஒவ்வொரு தேர்தலிலும் காங் கிரஸ், என்ஆர் காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தங்களது பிரச்சாரத்தை தொடங்கும் சுந்தர விநாயகர் கோயில், சீரமைப்பு பணிக்காக இடிக்கப்பட்டுள்ளது அரசியல் கட்சியினர் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரியின் சனி மூலையாக கருதப் படும் காலாப்பட்டு தொகுதிக்குட்பட்ட கனகசெட் டிக்குளத்தில் சுந்தர விநாயகர் கோயில் உள்ளது. புதுச்சேரியில் மக்களவை, சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் கட்சியினர் இக்கோயி லில் சாமி கும்பிட்டு இக்கோயில் அருகில் இருந்து பிரச்சாரத்தை தொடங்குவது வழக்கம். முதல்வர் நாராயணசாமி, எதிர்கட்சித் தலைவர் ரங்கசாமி உள்ளிட்ட தலைவர்கள் இதை வழக் கமாக கொண்டுள்ளனர்.
விரைவில் புதுச்சேரி மாநில சட்டப்பேரவைத் தேர்தல் வரவுள்ள நிலையில் இப்பகுதி மீண்டும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. புதுச்சேரி பாஜக நேற்று இதேஇடத்தில் இருந்து தான் பிரச்சாரத்தை தொடங்கினர். ஆனால், கோயில் முற்றிலும் இடித்து தரைமட்டம் ஆக்கப்பட்டுள்ளதால் பிரசாரத்துக்கு முன் இங்கு வழிபாடு நடத்த முடியவில்லை. திறந்தவெளியாக காணப்படும் கோயில் இடத்தின் அருகே சிறிய சிமெண்ட் கொட்டகையில் மூலவர் வைக்கப்பட்டுள்ளது.
தேர்தல் வரும் நேரத்தில் இக்கோயில் இடிக்கப்பட்டுள்ளது அரசியல் கட்சியினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக அப்பகுதியைச் சேர்ந்தவர் களிடம் கேட்டபோது, “புதிதாக கோயில் கட்டுவதற்காக கடந்த 10 நாட்களுக்கு முன்பு தான் கோயில் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. ராஜகோபுரம் பழுதடைந்து இருந்ததால் முதலில் அதை மட்டும் சீரமைக்க முடிவு செய்யப்பட்டது. ஆனால், கோயில் முழுவதையும் இடித்துவிட்டு புதிதாக கட்டுவதுதான் பொருத்தமாக இருக்கும் என பெரும்பாலான மக்கள் முடிவு செய்ததால் இது இடிக்கப்பட்டது. ரூ.2.5 கோடி செலவில் இக்கோயிலை கட்ட முடிவு செய்துள்ளோம்’’ எனத் தெரிவித்தனர்.