

யாதவர் சமுதாயம் குறித்து நான் தவறான எண்ணத்தில் பேசவில்லை. அப்படி யாரேனும் எண்ணியிருந்தால் அதற்காக வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன் என அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தெரிவித்துள்ளார்.
அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி அளித்தபோது யாதவர் சமுதாயத்தைப் பற்றி ஒரு வார்த்தை குறிப்பிட்டதாக செய்தி வெளியானது. இதற்கு யாதவ சமுதாயத்தைச் சேர்ந்த பல்வேறு அமைப்புகள் சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குறித்து பத்திரிகையாளர்கள் கேட்டபோது பதில் அளித்தேன். நான் யதார்த்தமாக பேசிக் கொண்டிருந்தபோது அந்த வார்த்தை வந்தது உண்மை. உடனே அதை நிறுத்திவிட்டு, ஸ்டாலின் குறித்து வேறு விஷயத்தை குறிப்பிட்டேன்.
நான் எப்போதும் ஜாதி, மதம் பார்ப்பது இல்லை. மதுரையில் முதல் முறையாக யாதவர் சமுதாயத்தவரை எம்.பி., துணை மேயர் பதவிகளுக்குக் கொண்டு வந்தோம். கட்சியில் யாதவர் சமூகத்தினர் பலர் வட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளில் உள்ளனர். இவர்க ளுக்கு நானே பொறுப்பு வழங்கியுள்ளேன்.
20 ஆண்டுகள் அதிமுக மாவட்டச் செயலாளராக உள்ளேன். முன்னாள் அமைச்சர் கண்ணப்பன் உள்ளிட்ட அனை வருக்கும் என்னைப் பற்றி நன்றாகத் தெரியும். நான்கடுகளவும் தவறான எண்ணத்தில் பேசவில்லை. அந்த நோக்கமும் இல்லை. அந்த சமூகத்தினர் புண்படுத்தப்பட்டதாக நினைத்தால், மன்னிப்புகோர கடமைப்பட்டுள்ளேன். அதிமுகவுக்கு என்னால், இந்த வார்த்தையால் எந்த கெட்ட பெயரும் வந்துவிடக் கூடாது. பொதுவாக என்னுடைய வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.