

திருநெல்வேலி மாவட்டத்தில் அணைப் பகுதிகளிலும் பிற இடங்களிலும் மழை நீடிக்கிறது. நேற்று காலை 8 மணி நிலவரப்படி பாபநாசம் அணைப்பகுதியில் 12 மி.மீ. மழை பதிவாகியிருந்தது. பாபநாசம் அணை நீர்மட்டம் நேற்றுமுன்தினம் முழு கொள்ளளவான 143 அடியை எட்டியதை அடுத்து, பாபநாசம் மற்றும் சேர்வலாறு அணைகளில் இருந்து விநாடிக்கு 5 ஆயிரம் கனஅடி தண்ணீர் உபரியாக வெளியேற்றப்பட்டது. இதனால் தாமிரபரணியில் தண்ணீர் கரைபுரண்டது. பாதுகாப்பு கருதி ஆற்றில் குளிக்க தடைவிதிக்கப்பட்டது.
பாபநாசம் அணையிலிருந்து நேற்று 3,980 கனஅடி தண்ணீர் திறந்துவிடப் பட்டிருந்தது. அணை நீர்மட்டம் 142.40 அடியாக இருந்ததால், அணை தண்ணீர் நிரம்பி கடல்போல் காட்சியளித்தது. அணைக்கு விநாடிக்கு 2,785 கனஅடி தண்ணீர் வந்து கொண்டி ருந்தது. 156 அடி உச்ச நீர்மட்டம் கொண்ட சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 146.65 அடியாக இருந்தது.
அணைப்பகுதியில் 17 மி.மீ. மழை பதிவாகியிருந்தது. 118 அடி உச்ச நீர்மட்டம் கொண்ட மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 106.45 அடியிலிருந்து 108 அடியாக உயர்ந்திருந்தது. அணைக்கு விநாடிக்கு 2,165 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. 480 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டிருந்தது. அணைப்பகுதியில் 3 மி.மீ. மழை பதிவாகியிருந்தது. அம்பாசமுத்திரத்தில் 6 மி.மீ., சேரன்மகாதேவியில் 2 மி.மீ., பாளையங்கோட்டையில் 1.20 மி.மீ., திருநெல்வேலியில் 1 மி.மீ. மழை பதிவாகியிருந்தது.
தென்காசி
தென்காசி மாவட்டத்தில் நேற்று காலை 8 மணி வரை 24 மணி நேரத்தில் கடனாநதி அணையில் 12 மி.மீ. மழை பதிவானது. செங்கோட்டையில் 5 மி.மீ., கருப்பாநதி அணை, குண்டாறு அணையில் தலா 4 மி.மீ., சங்கரன்கோவிலில் 1.20 மி.மீ., சிவகிரியில் 1 மி.மீ. மழை பதிவானது.
கடனாநதி அணை, குண்டாறு அணை ஆகியவை முழுமையாக நிரம்பிய நிலையில் உள்ளதால், இந்த அணைகளுக்கு வரும் நீர் அப்படியே உபரியாக வெளியேற்றப்படுகிறது. கடனாநதி அணையில் இருந்து விநாடிக்கு 512 கனஅடி நீரும், குண்டாறு அணையில் இருந்து 25 கனஅடி நீரும் வெளியேற்றப்பட்டது. 84 அடி உயரம் உள்ள ராமநதி அணை நீர்மட்டம் 80.50 அடியாக உள்ளது. 72 அடி உயரம் உள்ள கருப்பாநதி அணை நீர்மட்டம் 66.28 அடியாக உள்ளது. 132.22 அடி உயரம் உள்ள அடவிநயினார் அணை நீர்மட்டம் 85.50 அடியாக உள்ளது.
குற்றாலம் பிரதான அருவியில் நேற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், பாதுகாப்பு கருதி இரண்டாவது நாளாக குற்றாலம் பிரதான அருவியில் குளிக்க அனுமதிக்கப்படவில்லை. ஐந்தருவி, புலியருவி, பழைய குற்றாலம் அருவி ஆகியவற்றில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டது.