

மத்திய அரசின் திட்டத்துக்காக ஆரம்ப சுகாதார நிலையங்களை அம்மா கிளினிக் போர்டு மாற்றி அதே டாக்டர், செவிலியர்களை வைத்து முதல்வர் பழனிசாமி ஏமாற்றுவது கவுண்டமணி-செந்தில் வாழைப்பழ காமெடிபோல் உள்ளது என ஸ்டாலின் விமர்சித்தார்.
திருவள்ளூர் மாவட்ட திமுக சார்பில் தமிழகம் மீட்போம் கூட்டத்தில் கலந்துகொண்ட திமுக தலைவர் ஸ்டாலின், காணொலி வாயிலாகப் பேசியதாவது:
“முதல்வர் எடப்பாடி பழனிசாமி நடத்தும் இன்னொரு நாடகம்தான் மினி கிளினிக் நாடகம். கடந்த சில நாட்களாக ஏதோ பெரிய சாதனையைச் செய்து விட்டதாக பெருமையில் வலம் வருகிறார் முதல்வர் பழனிசாமி. 2 ஆயிரம் சிறு மருத்துவமனைகள் தொடங்கிவிட்டதாகச் சொல்லி வருகிறார்.
உண்மையில் அப்படித் தொடங்கி இருந்தால் அதனைப் பாராட்டலாம். ஆனால் கவுண்டமணி - செந்தில் வாழைப்பழ காமெடி போல இருக்கிறது பழனிசாமியின் மினி மருத்துவமனை திட்டம். 2000 மருத்துவமனைகளைப் பழனிசாமி உருவாக்கி இருக்கிறார். அப்படியானால் இந்த மருத்துவமனைகளுக்காக எத்தனை மருத்துவர்களைப் புதிதாக வேலைக்கு எடுத்துள்ளீர்கள்? இல்லை. எத்தனை செவிலியர்களை வேலைக்கு எடுத்துள்ளீர்கள்? இல்லை.
எத்தனை மருத்துவமனைகளைப் புதிதாகக் கட்டி இருக்கிறீர்கள்? இல்லை, அப்படியானால் மருத்துவமனைகள் எங்கே உள்ளன என்றால், ஏற்கெனவே இருக்கிற ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்களை, துணை சுகாதார மருத்துவமனை செவிலியர்களைக் கொண்டு வந்து இதில் உட்கார வைத்துப் புதிய மருத்துவமனை என்று காட்டுகிறார்கள்.
'இன்னொரு வாழைப்பழம் எங்க?' என்று கவுண்டமணி கேட்பார். 'அதுதாண்ணே இது' என்பார் செந்தில். அதுபோல, ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்களை மினி மருத்துவமனைகளுக்கு அனுப்பிவிட்டு இதுதாங்க அது என்கிறார்கள். மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் அமைப்பின்படி இதுபோன்ற மினி கிளினிக்குகளை அமைக்க வேண்டும் என்று உத்தரவு போட்டுள்ளார்கள்.
அதற்கு அம்மா பெயரை வைத்து புது பெயிண்ட் அடித்து, புது போர்டு மாட்டிக் கொள்கிறார் பழனிசாமி. கிராமத்தில் சொல்வார்கள், 'ஊர்ல கல்யாணம், மார்ல சந்தனம்' என்பதைப் போல, பழனிசாமி கொண்டாடிக் கொள்கிறார்.
இன்றைக்கு அரசு மருத்துவமனைக் கட்டமைப்புகள் உள்ளன என்றால் அதற்கு முழுக் காரணம் திமுக ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட அரசு மருத்துவமனைகள்தான் என்பதை, முதல்வரான பழனிசாமி அறிந்திருக்க வாய்ப்பில்லை.
மினி மருத்துவமனையை கடந்த நான்கு ஆண்டு காலத்தில் ஏன் அமைக்கவில்லை? ஆட்சி முடியப் போகும் போதுதான் இவை எல்லாம் ஞாபகத்துக்கு வருகிறதா? ஆட்சி முடியப் போகும் போதுதான் தூர் வார நினைக்கிறார். அணைகட்ட நினைக்கிறார். ஒப்பந்தம் போடுகிறார், குடிமராமத்து செய்யப் போவதாகச் சொல்கிறார்.
தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஊர் ஊராக முதல் தடவை போய் பார்க்கிறார். இந்த நான்கு ஆண்டுகள் தூங்கிக் கொண்டு இருந்தாரா பழனிசாமி? கோட்டையில் இதுவரை தூங்கிய பழனிசாமியை தட்டி எழுப்பி- வீட்டுக்கு போய் தூங்குங்கள் என்று சொல்வதற்கான தேர்தல்தான் இது”.
இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.