

‘‘எம்.பியாக வெற்றி பெற்றுவிட்டு கிராமங்களில் எட்டிப்பார்க்காத கார்த்தி சிதம்பரம் வாக்கு கேட்க வந்தால் கேள்வி கேளுங்கள்,’’ என கதர்கிராமத் தொழில்கள் நலவாரியத்துறை அமைச்சர் ஜி.பாஸ்கரன் தெரிவித்தார்.
சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலில் வருவாய்த்துறை சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. இதில் அமைச்சர் ஜி.பாஸ்கரன் 252 பயனாளிகளுக்கு ரூ.38.64 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
பிறகு அவர் பேசியதாவது:
மனையிடம் இல்லாதவர்கள் வட்டாட்சியரை சந்தித்து மனு கொடுத்தால் போதும் பட்டா வழங்கப்படும். அதை செய்யாமல் பட்டா கொடுக்கவில்லை என பொத்தம் பொதுவாக குறை சொல்லக் கூடாது.
நான் ஒன்றும் மிட்டா மிராசுதாரர் இல்லை. சாதாரண விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவன். என்னை எளிதில் சந்தித்து உங்களது குறைகளை தெரிவிக்கலாம்.
ஜனவரியில் காவிரி-வைகை-குண்டாறு இணைப்புத் திட்டத்தை முதல்வர் தொடங்கி வைப்பார். சிவகங்கைக்கு புதிதாக காவிரி குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதன்மூலம் நமது மாவட்டத்தில் குடிநீர் பிரச்சினை இருக்காது.
கடந்த பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று எம்பியான கார்த்தி சிதம்பரம் கிராமங்களில் மழையில் வீடு இடிந்தபோதோ, குடிநீர் பிரச்சினையின்போதோ உங்களை சந்திக்க வரவில்லை.
அவர் வருகிற தேர்தலில் வாக்கு கேட்டு வந்தால் கேள்வி கேளுங்க. எப்போதும் உங்களுக்காக செயல்படும் எங்களுக்கு ஆதரவு தாருங்கள், என்று கூறினார்.
இவ்விழாவில் மாவட்ட ஊராட்சித் தலைவர் பொன்.மணிபாஸ்கரன், துணைத் தலைவர் சரஸ்வதி அண்ணா, ஒன்றியத் தலைவர் ராஜேஸ்வரி, கோட்டாட்சியர் முத்துக்கலுவன், வட்டாட்சியர் ஜெயநிர்மலா, வருவாய் கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் ராஜா, கூட்டுறவு சங்கத் தலைவர்கள் சசிக்குமார், கருணாகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.