

ஐஐடி எனப்படும் இந்தியத் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் பேராசிரியர் பணியிட நியமனங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், அட்டவணை சாதியினர் மற்றும் அட்டவணை பழங்குடியினருக்கான இட ஒதுக்கீட்டை அகற்றிட மத்திய அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது மிக்க வேதனை அளிக்கிறது என டி.ஆர்.பாலு மத்தியக் கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலுக்குக் கடிதம் எழுதியுள்ளார்.
இதுகுறித்து திமுக இன்று வெளியிட்ட தகவல் குறிப்பு:
''ஐ.ஐ.டி. என்றழைக்கப்படும் மத்திய அரசின் இந்தியத் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் உள்ளிட்ட உயர் கல்வி நிறுவனங்களில் இதர பிற்படுத்தப்பட்டோர், அட்டவணை சாதியினர் மற்றும் அட்டவணை பழங்குடியினருக்குப் பேராசிரியர் பணியிட நியமனங்களில் இட ஒதுக்கீடு தொடர்பான நிலையை ஆய்வு செய்வதற்காக அமைக்கப்பட்ட ராம்கோபால் ராவ் தலைமையிலான குழு பேராசிரியர் நியமனங்களில் இட ஒதுக்கீடு தேவையில்லை என்று பரிந்துரை செய்துள்ளது.
பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள இந்தச் சமூக நீதி உரிமையைப் பறிக்கும் நோக்கில் முயற்சி மேற்கொண்டுள்ள மத்திய அரசுக்குக் கண்டனம் விடுத்தும், ராம்கோபால் ராவ் குழு அறிக்கையை நிராகரிக்கவும் மத்திய அரசின் கல்வி நிறுவனங்கள் இட ஓதுக்கீட்டை மேலும் தாமதமின்றிச் செயல்படுத்தி அனைத்துக் காலிப் பணியிடங்களையும் நிரப்பக் கோரியும் மத்தியக் கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலுக்கு திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு கடிதம் ஒன்றை இன்று (19.12.2020) எழுதியுள்ளார்''.
இவ்வாறு திமுக தெரிவித்துள்ளது.
மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலுக்கு டி.ஆர்.பாலு எழுதிய கடிதம்:
“ஐ.ஐ.டி. எனப்படும் இந்தியத் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் பேராசிரியர் பணியிட நியமனங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், அட்டவணை சாதியினர் மற்றும் அட்டவணை பழங்குடியினருக்கான இட ஒதுக்கீட்டை அகற்றிட மத்திய அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது மிக்க வேதனை அளிக்கிறது.”
ஐ.ஐ.டியில் இட ஒதுக்கீடு கொள்கையை முழுமையாக நடைமுறைப்படுத்துவது பற்றி பரிந்துரைகள் செய்வதற்காக ஐஐடி இயக்குனர் வி.ராம்கோபால் ராவ் தலைமையில் மத்திய அரசால் ஒரு குழு நியமிக்கப்பட்டு அந்தக் குழு உதவிப் பேராசிரியர்கள், இணைப் பேராசிரியர்கள், பேராசிரியர்கள் ஆகிய நியமனங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், அட்டவணை சாதியினர் மற்றும் அட்டவணை பழங்குடியினர் பிரிவினருக்கு இட ஒதுக்கீடு வழங்கக் கூடாது என்று பரிந்துரை செய்துள்ளது.
மேலும், (i) சிறப்புநிலைக் கல்வி நிறுவனங்கள் பட்டியலில் ஐ.ஐ.டியைச் சேர்க்கவும்; (ii) முதல் நிலை மற்றும் இரண்டாம் நிலை உதவிப் பேராசிரியர்கள் பணி நியமனத்தில் மட்டுமே இட ஒதுக்கீடு பின்பற்றப்படவும். (iii) தகுதியுள்ளவர்கள் கிடைக்காவிட்டால் ஒரு குறிப்பிட்ட ஆண்டில் இடங்கள் பூர்த்தி செய்யப்படாமல் இருந்தால், அடுத்த ஆண்டு இட ஒதுக்கீட்டைக் கைவிடவும் அந்தக் குழு பரிந்துரைத்துள்ளதாகவும் அறிகிறோம்.
இட ஒதுக்கீட்டுக் கொள்கையினால் தரமும் தகுதியும் குறைந்துபோவதாக குழு அறிக்கையில் மிகத் தவறாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், ஆசிரியர்கள் பணி நியமனத்தில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், அட்டவணை சாதியினர் மற்றும் அட்டவணை பழங்குடியினர் பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் 5 விழுக்காடு உள்ளனர். மீதமுள்ள ஆசிரியர் பணியிடங்கள் அனைத்தையும் உயர் சாதியினரே ஆக்கிரமித்துள்ளனர் என்று அரசு புள்ளி விவரங்களிலிருந்து தெரியவருகிறது. எனவே, அந்தக் குழுவின் பரிந்துரைகளை முற்றிலுமாக நிராகரிக்க வேண்டும்.
ஐஐடிஉள்ளிட்ட மத்தியக் கல்வி நிறுவனங்களில் ஆசிரியர் பணிகளில் இட ஒதுக்கீட்டுக் கொள்கை நியாயமாகவும், கவனமாகவும் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பதை உங்கள் கவனத்திற்குக் கொண்டு வருகிறேன். இந்தக் குறைபாடு இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் நாடாளுமன்றக் குழுவினாலும் மற்றும் நலச் சங்கங்களினாலும் பலமுறை சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், அட்டவணை சாதியினர் மற்றும் அட்டவணை பழங்குடியினர் நலச்சங்கங்கள் அளித்த வேண்டுகோள்களினாலும், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் நாடாளுமன்றக் குழு அளித்த அறிக்கைகளினாலும், மத்திய / மாநில நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் ஆகிய அனைத்தும் ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியிடங்களில் இட ஒதுக்கீட்டுக் கொள்கையைப் பின்பற்ற வேண்டுமென்று 2020 அக்டோபர் 19ஆம் நாள் பல்கலைக்கழக மானியக் குழு தன்னுடைய கடிதத்தில் அறிவுறுத்தியுள்ளது.
ஆனால், பேராசிரியர் ராம்கோபால் ராவ் தலைமையிலான குழு எதற்காக நியமிக்கப்பட்டதோ அந்த வேலையைச் செய்யாமல் மிகவும் பிற்போக்குத்தனமான மற்றும் கண்டனத்திற்குரிய வகையில் இட ஒதுக்கீட்டுக் கொள்கையைப் பின்பற்றுவதற்கு எதிர்மறையான முடிவை எடுத்துள்ளது.
நேரடி நியமனத்தில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதவிகிதம் இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று இட ஒதுக்கீட்டுக் கொள்கை கொண்டு வந்து 27 ஆண்டுகள் ஆன பின்பும், உயர்கல்வியில் மிக உயர்ந்த பணியிடங்களில் ஒரு சதவிகிதமே பிற்படுத்தப்பட்டோர் உள்ளனர் என்பது வேதனைக்குரியதாகும்.
இட ஒதுக்கீட்டுக் கொள்கையை நடைமுறைப்படுத்துவது அரசியலமைப்புச் சட்டப்படியான கடமையாகும். அதிலிருந்து மீறுவது கடும் நடவடிக்கைக்கு உள்ளாக்கப்படும் என்பது அனைத்து மத்தியக் கல்வி நிறுவனங்களுக்கும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் தெளிவாக அறிவிக்கப்பட வேண்டும்.
எனவே, பேராசிரியர் ராம்கோபால் ராவ் குழு பரிந்துரைகளை மத்திய அரசு முற்றிலுமாக நிராகரிக்க வேண்டுமென்றும், ஐ.ஐ.டி.உள்ளிட்ட அனைத்து மத்தியக் கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீட்டில் காலியாக உள்ள இடங்களை, தேவையெனில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் நாடாளுமன்றக் குழு பரிந்துரைத்துள்ளபடி, ஒரு சிறப்புத் தேர்வின் மூலம் நிரப்பிட வேண்டுமென்றும் மத்திய அரசு அறிவுறுத்த வேண்டுமென்றும் திமுக கேட்டுக் கொள்கிறது''.
இவ்வாறு டி.ஆர்.பாலு கடிதத்தில் கோரியுள்ளார்.