Published : 19 Dec 2020 06:09 PM
Last Updated : 19 Dec 2020 06:09 PM

103 கிலோ தங்கம் மாயமான விவகாரம்; சிபிஐயும் களத்தில் குதித்தது: முன்னாள் அதிகாரிகளிடம் விரைவில் விசாரணை

சென்னை

சிபிஐ பாதுகாப்பில் இருந்த 103 கிலோ தங்கம் மாயமான வழக்கில், சிபிசிஐடி போலீஸ் விசாரணைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், சிபிஐயும் விசாரணைக்கு குழு அமைத்து சென்னைக்கு அனுப்பியுள்ளது.

கடந்த 2012-ம் ஆண்டு சென்னையில் சட்ட விரோதமாகத் தங்கம் இறக்குமதி செய்யப்படுவதாக சிபிஐக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, சென்னை என்எஸ்சி போஸ் சாலையில் உள்ள சுரானா நிறுவனத்தில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

அப்போது 400.47 கிலோ தங்கத்தைக் கட்டிகளாகவும், நகைகளாகவும் பறிமுதல் செய்தனர். இது சம்பந்தமாக, சுரானா நிறுவனத்தின் மீதும், அந்த நிறுவனத்திற்கு உடந்தையாக இருந்த அதிகாரிகள் மீதும் சிபிஐ வழக்குப் பதிவு செய்தது.

பறிமுதல் செய்யப்பட்ட 400.47 கிலோ தங்கம் சுரானா நிறுவனத்தில் உள்ள லாக்கர்களில் சீல் வைக்கப்பட்டது. அந்த லாக்கர்களின் 72 சாவிகளும், 400.47 கிலோ பறிமுதல் செய்ததாகத் தயாரிக்கப்பட்ட பட்டியல் ஆவணமும் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

இதற்கிடையில், சுரானா நிறுவனம் எஸ்பிஐ, பஞ்சாப் நேஷனல் வங்கி, ஐடிபிஐ, பேங்க் ஆஃப் இந்தியா, ஸ்டேண்டர்டு சார்ட்டர்டு வங்கி ஆகிய வங்கிகளிடம் பெற்ற 1,160 கோடி ரூபாயை ஈடுகட்ட ஏதுவாக, பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தைச் சிறப்பு அதிகாரிக்கு வழங்க சிபிஐக்கு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதன்படி சுரானா நிறுவனத்தின் லாக்கர்களில் இருந்த தங்கத்தை எடை பார்த்தபோது 296.606 கிலோ தங்கம் மட்டுமே இருந்தது. 103.864 கிலோ தங்கத்தைக் காணவில்லை. இதையடுத்து, 103.864 கிலோ தங்கத்தை ஒப்படைக்கக் கோரி சிறப்பு அதிகாரியான ராமசுப்பிரமணியன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி பி.என்.பிரகாஷ், பல கோடி ரூபாய் மதிப்புள்ள 103 கிலோ கிராம் தங்கம் மாயமாகி இருப்பது என்பது சிபிஐ மீது பெருத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறினார்.

மேலும், இது சம்பந்தமாக வழக்குப் பதிவு செய்து, எஸ்.பி. அந்தஸ்துக்குக் குறையாத அதிகாரியைக் கொண்டு விசாரித்து ஆறு மாதங்களில் இறுதி அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும் என சிபிசிஐடிக்கு உத்தரவிட்டார்.

தங்கம் எடை குறையும் உலோகம் அல்ல என்றும், இது சிபிஐக்கு ஒரு அக்னி பரீட்சை போன்றது என்றும் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ள நீதிபதி, இந்த மோசடியில் யார் குற்றவாளி என்பதைக் கண்டுபிடிக்க வேண்டியுள்ளதால் சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடுவதாகவும் தெரிவித்தார். மாயமான தங்கத்தைக் கண்டுபிடிக்கும் பொறுப்பு தற்போது சிபிசிஐடி போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

தற்போது உயர் நீதிமன்ற உத்தரவு டிஜிபி அலுவலகத்துக்கு வந்து சேர்ந்தபின்னர், சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் புகாரைப் பெற்று சிபிசிஐடி போலீஸார் விசாரணையில் இறங்க உள்ளனர். இந்த நிலையில், லாக்கர்களில் வைக்கப்பட்டிருந்த தங்கம் மாயமான விவகாரத்தில் சிபிஐ அதிகாரிகளுக்குத் தொடர்பு இருந்தால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று டெல்லி சிபிஐ தலைமை அலுவலகம் எச்சரிக்கை விடுத்திருந்தது.

அதைத் தொடர்ந்து மாயமான 103 கிலோ தங்கம் குறித்து விசாரணை நடத்த டெல்லி சிபிஐ அதிகாரிகளைக் கொண்ட ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. இரு நாட்களுக்கு முன்பு சென்னை வந்த இந்தக் குழுவினர், சுரானா நிறுவனத்தில் சோதனை நடத்திய மற்றும் அப்போது பொறுப்பில் இருந்த சிபிஐ அதிகாரிகளிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிபிஐயின் தென்மண்டலப் பொறுப்பில் இருந்த ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி ஒருவரிடமும், தமிழக காவல் துறையில் டிஜிபி அந்தஸ்தில் இருந்து ஓய்வுபெற்ற அதிகாரி ஒருவரிடமும் விசாரணை நடத்த உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x