Last Updated : 19 Dec, 2020 03:51 PM

 

Published : 19 Dec 2020 03:51 PM
Last Updated : 19 Dec 2020 03:51 PM

சாத்தனூர் அணை திறக்கப்படாமலேயே 5 ஆண்டுகளுக்குப் பிறகு நிரம்பி வழியும் சொர்ணாவூர் அணைக்கட்டு; விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி

தண்ணீர் நிரம்பி வழியும் சொர்ணாவூர் அணைக்கட்டு.

புதுச்சேரி

சாத்தனூர் அணை திறக்கப்படாத நிலையில், கனமழையால் நீர்வரத்து அதிகரித்து வாய்க்கால்கள் வழியாக வந்த தண்ணீரால் 5 ஆண்டுகளுக்குப் பிறகு சொர்ணாவூர் அணைக்கட்டு நிரம்பி வழிவதால் விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

வடகிழக்குப் பருவமழை காரணமாக கடந்த சில நாட்களாக பெய்து வரும் கன மழையால் பெரும்பாலான இடங்களில் மழைநீர் வெள்ளம்போல் சூழ்ந்துள்ளது. மேலும், நிவர் மற்றும் புரெவி புயல் காரணமாக பொழிந்த மழையால் புதுச்சேரியில் உள்ள ஏரிகள், குளங்கள், படுகை அணைகள், அணைக்கட்டுகள் நிரம்பி வழிகின்றன.

இந்நிலையில், சாத்தனூர் அணை திறக்கப்படாத நிலையில், கனமழையால் நீர்வரத்து வாய்க்கால்கள் வழியாக வந்த தண்ணீரால் 5 ஆண்டுகளுக்குப் பிறகு சொர்ணாவூர் அணைக்கட்டு நிரம்பி வழிவது பொதுமக்களையும், விவசாயிகளையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

புதுச்சேரி மாநிலம் கரையம்புத்தூர் அடுத்த சொர்ணாவூர் கிராமத்தில் சொர்ணாவூர் அணைக்கட்டு உள்ளது. பாகூர் விவசாயிகள் மற்றும் அதனை சுற்றியுள்ள புதுச்சேரி மற்றும் தமிழக பகுதி விவசாயிகள் பயன்பெறும் வகையில் இந்த அணைக்கட்டு கட்டப்பட்டது. இந்த அணைக்கட்டு புதுச்சேரி பொதுப்பணித்துறை நீர்ப்பாசன பிரிவு கண்காணிப்பில் இருந்து வருகிறது.

பெரும்பாலும் சாத்தனூர் அணைக்கட்டு நிரம்பி வழியும் தருவாயில் அல்லது அணைக்கட்டு திறக்கப்படும் பட்சத்தில் தான் சொர்ணாவூர் அணைக்கட்டுக்கு தண்ணீர் வந்து சேருவது வழக்கம். ஆனால் தற்போது கடந்த சில தினங்களாக பெய்து வரும் கனமழை காரணமாக விளை நிலங்களில் இருந்து வெளியேறும் தண்ணீர் வாய்க்கால்கள் வழியாகவும், விழுப்புரம் மாவட்டம் தளவானூர் கிராமம் மற்றும் கடலூர் மாவட்டம் எனதிரிமங்கலம் கிராமங்களுக்கு இடையே தென்பெண்ணையாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணைகட்டு நிரம்பி வழிவதாலும் சொர்ணாவூர் அணைக்கட்டுக்கு சுமார் விநாடிக்கு 1.20 கன அடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது.

இதனால் சொர்ணாவூர் அணைக்கட்டு சாத்தனூர் அணை திறக்கப்படாமலேயே 2015-க்குப் பிறகு தற்போது நிரம்பி வழிகிறது. அணைகட்டில் வழிந்தோடும் தண்ணீரின் அழைகை அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கண்டு சரிப்பதோடு, குளித்து மகிழ்ந்து வருகின்றனர். செல்பியும் எடுத்துச் செல்கின்றனர். பொதுப்பணித்துறை ஊழியர்களும் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும், சொர்ணாவூர் அணைக்கட்டு நிரம்பி வழிவதால் தென்பெண்ணை ஆற்றில் படிப்படியாக நீர் வருவதால் இடையிடையே உள்ள கிராம மக்களும் தண்ணீர் வருகையை கண்டு ரசித்து வருகின்றனர்.

இது குறித்து புதுச்சேரி பொதுப்பணித்துறை நீர்பாசன பிரிவு அதிகாரிகள் கூறும்போது, "தொடர்ந்து பெய்து வரும் கனமழையாலும், தளவனூர் அணைக்கட்டு நிரம்பி வழிவதாலும் சொர்ணாவூர் அணைக்கட்டுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அணைக்கட்டில் மதகு திறக்கப்பட்டு பங்காரு வாய்க்கால் வழியாக தண்ணீர் வருகிறது. இதனால் பாகூர் சுற்றவட்டாரத்தில் உள்ள ஏரிகள், நிர்நிலைகளுக்கு கூடுதல் தண்ணீர் கிடைக்கும். நிலத்தடி நீர்மட்டமும் உயரும், கோடைக்காலத்தை சமாளிக்கவும் ஏதுவாக இருக்கும். தண்ணீர் வருகையால் பாகூர் மற்றும் சுற்றுவட்டார பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்" என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x