

கனிமொழி மட்டுமல்ல, திமுகவின் அனைத்துத் தலைவர்களும் பிரச்சாரம் செய்தாலும் எடப்பாடி தொகுதியில் வெற்றி பெற முடியாது என, முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு முதல்வர் பழனிசாமி, எடப்பாடி தொகுதியிலிருந்து இன்று (டிச.19) பிரச்சாரத்தைத் தொடங்குவதாக நேற்று அறிவித்திருந்தார். அதன்படி, இன்று தனது சொந்தத் தொகுதியான எடப்பாடியை அடுத்த பெரிய சோரகை கிராமத்தில் உள்ள அருள்மிகு சென்றாயப்பெருமாள் கோயிலில் தரிசனம் செய்தார்.
பின்னர், அப்பகுதிக்கான அம்மா மினி கிளினிக்கைத் திறந்து வைத்தார். பின்னர், அவர் பிரச்சாரத்திற்காக பிரத்யேகமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வேனில் ஏறி 2021ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பிரச்சாரத்தைத் தொடங்கினார்.
பிரச்சாரத்தின்போது மக்களிடம் அவர் பேசியதாவது:
"தமிழக மக்களுக்காக எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகிய இருபெரும் தலைவர்களின் சிறப்பான ஆட்சியால் தமிழகத்தில் அதிமுக 31 ஆண்டுகள் ஆட்சி புரிந்து வருகிறது. ஜெயலலிதா மறைவுக்குப் பின் இந்த ஆட்சி ஒரு மாதம் நீடிக்குமா, ஆறுமாதம் தாக்குப்பிடிக்குமா என்றெல்லாம் பேசினார்கள். இன்றைக்கு இத்தனை தடைகளையும் கடந்து நான்காண்டுகளாகத் தொடர்ந்து ஆட்சி நீடித்து வருகிறது.
எடப்பாடி தொகுதியில் 1977-ல் இருந்து திமுக ஒரு முறை கூட வெற்றி பெறவில்லை. சட்டப்பேரவைத் தேர்தல்களில் அதிமுகவினர் அதன் கூட்டணிக் கட்சிகள்தான் 43 ஆண்டுகள் தொடர்ந்து வெற்றி பெற்று வருகின்றன. எடப்பாடி தொகுதி அதிமுகவின் எஃகு கோட்டை. கனிமொழி மட்டுமல்ல, திமுகவின் அனைத்துத் தலைவர்களும் பிரச்சாரம் செய்தாலும் இங்கே வெற்றி பெற முடியாது. வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணி மிகப் பெரும் வெற்றியைப் பெறும்".
இவ்வாறு முதல்வர் பழனிசாமி பேசினார்.