

திமுக கூட்டணியில் தொடர்ந்து இடம் பெறுவோம் எனவும், 6 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு மேல் எதிர்பார்த்துள்ளோம் எனவும் ஐஜேகே தலைவர் ரவி பச்சமுத்து தெரிவித்தார்.
அரியலூர் மாவட்டத்தில் பல்வேறு கிராமங்களில் கட்சிக் கொடி ஏற்றும் நிகழ்ச்சிகளில் இந்திய ஜனநாயக கட்சித் தலைவர் ரவி பச்சமுத்து இன்று (டிச.19) கலந்துகொண்டார்.
செந்துறை ரவுண்டானா பகுதியில் கட்சிக் கொடியை ஏற்றி வைத்த அவர் பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
"விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும், 3 புதிய வேளாண் சட்டங்களை வாபஸ் பெற வலியுறுத்தியும், திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் இந்திய ஜனநாயகக் கட்சி பங்கேற்றது. தொடர்ந்து நடைபெறும் போராட்டங்களில் ஐஜேகே கலந்துகொள்ளும்.
அரியலூர் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடுவது குறித்துப் பின்னர் தெரிவிக்கப்படும். திமுக கூட்டணியில் தொடர்வோம். ஒரு மக்களவைத் தொகுதியில் வெற்றி பெற்றுள்ள நிலையில், தொகுதி ஒதுக்கீட்டில் 6 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு மேல் எதிர்பார்த்துள்ளோம்".
இவ்வாறு ரவி பச்சமுத்து தெரிவித்தார்.