

மேற்கு வங்கத்தில் பணியாற்றும் மூன்று ஐபிஎஸ் அதிகாரிகளை மத்திய பாஜக அரசு ஒருதலைப்பட்சமாக இடமாற்றம் செய்திருப்பது எதேச்சதிகாரமானது, கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரானது என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா மேற்கு வங்கத்துக்கு கடந்த வாரம் வந்தபோது, அவரின் பாதுகாப்பு வாகனம் தாக்கப்பட்டபின் பாஜகவுக்கும், திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கும் இடையே மோதல் தீவிரமடைந்தது.
மேற்கு வங்க தலைமைச் செயலாளர், போலீஸ் டிஜிபி ஆகியோருக்கு சம்மன் அனுப்பி நேரில் ஆஜராக மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது. ஆனால், அவர்களை டெல்லிக்கு அனுப்ப முதல்வர் மம்தா பானர்ஜி மறுத்துவிட்டார். இதையடுத்து, நட்டாவுக்குப் பாதுகாப்பு அளிக்கும் பொறுப்பில் இருந்த 3 ஐபிஎஸ் அதிகாரிகளையும் மத்தியப் பணிக்கு மாற்றி மத்திய உள்துறை உத்தரவிட்டது.
ஆனால், அந்த அதிகாரிகள் மூவரையும் இன்னும் மாநிலப் பணியிலிருந்து விடுவிக்காமல், மேற்கு வங்க அரசு வைத்துள்ளது. இதை நினைவூட்டி, மத்திய உள்துறை அமைச்சகம் மேற்கு வங்க அரசுக்குக் கடிதம் எழுதிய பின்பும் மம்தா அரசு இன்னும் விடுவிக்கவில்லை.
இந்த விவகாரம் தொடர்பாக, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று (டிச. 19) தன் முகநூல் பக்கத்தில், "மேற்கு வங்கத்தில் பணியாற்றும் மூன்று ஐபிஎஸ் அதிகாரிகளை மத்திய பாஜக அரசு ஒருதலைப்பட்சமாக இடமாற்றம் செய்திருப்பது எதேச்சதிகாரமானது, கூட்டாட்சி தத்துவத்திற்கும் எதிரானது.
டெல்லியில் உள்ள மத்திய அரசானது தம் விருப்பத்திற்கு ஏற்ப நாட்டின் குடிமைப்பணிகளில் ஆணையிடுதல் கூடாது.
பிரதமர் இந்த உத்தரவை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்துகிறேன்" எனப் பதிவிட்டுள்ளார்.