Published : 19 Dec 2020 03:14 AM
Last Updated : 19 Dec 2020 03:14 AM

சாதியில்லா சமுதாயத்தை நோக்கி செல்லும்போது சாதிவாரி கணக்கெடுப்பு ஏன்?- உயர் நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி

சாதியில்லா சமுதாயத்தை நோக்கி பயணிக்கும்போது சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை ஏன் நடத்த வேண்டும்என சென்னை உயர் நீதிமன்றநீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

வழக்கறிஞர் ஆனந்த்பாபு என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், ‘‘தமிழகத்தில் கல்வி மற்றும்வேலைவாய்ப்பிலும், அரசின் சலுகைகளைப் பெறவும் இடஒதுக்கீடு பின்பற்றப்படுகிறது. இந்த இடஒதுக்கீட்டை முழுமையாக அமல்படுத்த சாதிவாரியாகமக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்த தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்’’ என கோரியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், ஆர்.பொங்கியப்பன் ஆகியோர் அடங்கியஅமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், ‘‘ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் இதுபோன்ற சாதிவாரியான மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. சமீபகாலமாக பல்வேறு சமுதாயங்களைச் சேர்ந்தவர்கள் தங்களது மக்கள்தொகைக்கு ஏற்ப இடஒதுக்கீடு வழங்கக் கோரி போராட்டம் நடத்தி வருகின்றனர். எனவே. மக்கள்தொகை கணக்கெடுப்பை சாதிவாரியாக நடத்த வேண்டும்’’ என வாதிடப்பட்டது.

அதை ஏற்க மறுத்த நீதிபதிகள், ‘‘சாதியில்லா சமுதாயத்தை நோக்கி பயணிக்கும்போது சாதி வாரியாக ஏன் கணக்கெடுப்பு நடத்த வேண்டும்’’ என மனுதாரருக்கு கேள்வி எழுப்பினர். மேலும், ‘‘போராட்டங்களால் எதையும் சாதிக்க முடியாது. ஏற்கெனவே சாதிவாரியாக புள்ளி விவரங்களை சேகரிக்க உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி குலசேகரன் தலைமையில் ஆணையம் அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. எனவே, மனுதாரரின் கோரிக்கையை ஏற்கமுடியாது’’ எனக் கூறி மனுவைதள்ளுபடி செய்து உத்தரவிட்ட னர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x