Published : 19 Dec 2020 03:14 AM
Last Updated : 19 Dec 2020 03:14 AM

ஐஐடி மாணவர்கள் 28 பேர் குணமடைந்து விடுதி திரும்பினர்; கரோனா பாதிப்பு, இறப்பு விகிதத்தை குறைக்க நடவடிக்கை: அலட்சியம் கூடாது என பொதுமக்களுக்கு ஜெ.ராதாகிருஷ்ணன் வேண்டுகோள்

கரோனா பாதிப்பு, இறப்பு விகிதத்தை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் பொதுமக்கள் அலட்சியமாக இருக்கக் கூடாது என்றும் சுகாதாரத் துறைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சென்னை கிண்டி ஐஐடியில் மாணவர்கள், பணியாளர்கள் 191பேருக்கும் அண்ணா பல்கலைக்கழகத்தில் 6 மாணவர்களுக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்கள் கிண்டி கிங் இன்ஸ்டிடியூட் அரசு கரோனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில், குணமடைந்த 28 மாணவர்களை வழியனுப்பும் நிகழ்ச்சி மருத்துவமனையில் நேற்று நடைபெற்றது. அங்கு வந்தசுகாதாரத் துறைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன், மாணவர்களிடம் நலம் விசாரித்தார். பின்னர்,அவர்கள் பேருந்து மூலம் ஐஐடியில் உள்ள பத்ரா என்ற தனி விடுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டு தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டனர்.

பின்னர் ஜெ.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசியதா வது:

சென்னை மாநகராட்சியில் 97 கல்லூரிகளில், 161 விடுதிகளில் 15நாட்களுக்கு ஒரு முறை பரிசோதனை செய்கிறோம். 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனை செய்ததில், 4 ஆயிரத்துக்கு மேற்பட்ட முடிவுகள்வந்துள்ளன. இதில் 210 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. ‘வாக் இன்’ பரிசோதனை மையங்கள் ஐஐடியில் அமைக்கப்பட்டுள்ளன. தனி மருத்துவ குழுக்கள் பணியில் உள்ளன.

அண்ணா பல்கலைக்கழகத்தில் 1,300-க்கும் மேற்பட்ட மாதிரிகள்பரிசோதனைக்கு எடுக்கப்பட்டுள்ளன. சென்னை மாநகராட்சி அன்றாட பரிசோதனைகளின் எண்ணிக்கையை 11 ஆயிரமாக அதிகரித்துள்ளது. மாநிலத்தில் தொற்று உறுதிசெய்யும் விகிதம் 2 சதவீதத்துக்கும் கீழும் சென்னையில் 3.5 சதவீதத்துக்கும் கீழும் உள்ளது. கடந்த வாரம் 0.86 சதவீதமாக இருந்த இறப்பு சதவீதம் இந்த வாரம் 1.1 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதை 1 சதவீதத்துக்கும் கீழ் குறைக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

தொற்று குறைகிறது என்றோ அல்லது தடுப்பு மருந்து வருகிறது என்ற காரணத்தினாலோ யாரும் அலட்சியமாக இருக்க வேண்டாம். எல்லா துறைகளுக்கும் பொது சுகாதாரத் துறை மூலம் அறிவுறுத்தல்கள் வழங்கப்படுகின்றன. ஐஐடிமீது கொள்ளை நோய் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அது தேவையற்ற பதட்டத்தை ஏற்படுத்தும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பேட்டியின்போது மருத்துவமனை இயக்குநர் கே.நாராயணசாமி, சென்னை அரசு பொது மருத்துவமனை டீன் தேரணிராஜன் ஆகியோர் உடன் இருந்தனர்.

எய்ம்ஸ் நில விவகாரத்தில் தவறான தகவல்

எய்ம்ஸுக்கு நிலம் கொடுக்கவில்லை என வெளியான செய்தி குறித்து சுகாதாரத் துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் கூறியதாவது:

எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கு தமிழக அரசு நிலம் கொடுக்கவில்லை என்ற செய்தி தவறானது. சர்வே நம்பர் வாரியாக அனைத்துஆவணங்களையும் அரசு கொடுத்துள்ளது. மத்திய சுகாதாரத் துறைசெயலர் மற்றும் எய்ம்ஸ் நிர்வாகத்திடம் பேசியுள்ளேன். ரூ.7.2 கோடி செலவில் சுற்றுச்சுவர் அமைக்கும் பணிகள் 90 சதவீதம் நடைபெறுகின்றன. கரோனா காலம் என்பதால், ஜெய்கா நிறுவனம் மதிப்பீட்டுக்கு வர இயலவில்லை. ஆனால் தகவல் உரிமைச் சட்டத்தில் பதில் அளிக்கும்போது தவறாக கூறப்பட்டுள்ளது.

மினி கிளினிக்குகளால் அரசு மருத்துவர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்குமா என்பது குறித்து மருத்துவர்களின் கருத்துகளைகேட்டு நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x