

டார்ச் லைட் சின்னத்தை தங்களது கட்சிக்கு ஒதுக்கக் கோரி மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக கமல் ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் வடக்கு மற்றும் கிழக்கு அமைப்பு பொதுச் செயலாளரான ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரி ஏ.ஜி.மவுரியா, சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு கடந்த தேர்தல்களில் டார்ச் லைட் சின்னம் ஒதுக்கப்பட்டு மக்களை சந்தித்து வந்துள்ளது. நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலில் புதுச்சேரியில் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு டார்ச் லைட் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், தமிழகத்தில் இந்த முறை அந்த சின்னம் எங்களது கட்சிக்கு ஒதுக்கப்படாதது அதிர்ச்சி அளிக்கிறது.
அதேநேரம், எம்ஜிஆர் மக்கள்கட்சிக்கு எங்களது சின்னமான டார்ச் லைட் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே, வரவுள்ள தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு தேர்தல் சின்னங்கள் ஒதுக்கீடு உத்தரவுப்படி டார்ச் லைட் சின்னத்தை மக்கள் நீதிமய்யம் கட்சிக்கு ஒதுக்க வேண்டும். அந்த சின்னத்தை எம்ஜிஆர் மக்கள் கட்சி பயன்படுத்த தடை விதிக்க வேண்டும். இவ்வாறு அதில் கோரியுள்ளார்.