Published : 19 Dec 2020 03:15 AM
Last Updated : 19 Dec 2020 03:15 AM

வெள்ளம் கரைபுரள்வதால் தாமிரபரணியில் குளிக்கத்தடை: ஆர்ப்பரித்துக் கொட்டும் குற்றாலம், மணிமுத்தாறு அருவிகள்

பாபநாசம் அணை தொடர் மழை காரணமாக தனது முழு கொள்ளளவை நேற்று எட்டியது. பாபநாசம், சேர்வலாறு அணைகளில் இருந்து 4,680 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால், தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் கரைபுரள்கிறது. குற்றாலம், மணிமுத்தாறு அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக அணைப் பகுதிகளிலும், பிறபகுதிகளிலும் மழை நீடிக்கிறது. நேற்று காலை

8 மணி நிலவரப்படி பெய்த மழையளவு (மி.மீட்டரில்): பாபநாசம்- 35, சேர்வலாறு- 16, மணிமுத்தாறு- 10, நம்பியாறு- 6, கொடுமுடியாறு- 10, அம்பா சமுத்திரம்- 8.20, சேரன்மகாதேவி- 2.20, நாங்குநேரி- 9, ராதாபுரம்- 2, பாளையங்கோட்டை- 5.40, திருநெல்வேலி- 3.

143 அடி உச்ச நீர்மட்டம் கொண்ட பாபநாசம் அணையின் நீர்மட்டம் நேற்று காலை 142.40 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 2033.87 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணை நிரம்பியதை அடுத்து பாபநாசம், சேர்வலாறு அணைகளில் இருந்து 4,680 கனஅடி உபரிநீர் தாமிரபரணி ஆற்றில் திறந்துவிடப்பட்டுள்ளது. தாமிரபரணி ஆற்றங்கரையில் வசிக்கும் மக்கள் கவனமுடன் இருக்க மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. அதிகளவில் தண்ணீர் கரைபுரள்வதால் ஆற்றில் குளிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

156 அடி உச்ச நீர்மட்டம் கொண்ட சேர்வலாறு அணை நீர்மட்டம் 148.95 அடியாக இருந்தது. 118 அடி உச்ச நீர்மட்டம் கொண்ட மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 106.45 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 1,132 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து 480 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டிருந்தது. வடக்கு பச்சையாறு நீர்மட்டம் 25 அடியாகவும், நம்பியாறு நீர்மட்டம் 10.62 அடியாகவும், கொடுமுடியாறு நீர்மட்டம் 27 அடியாகவும் இருந்தது. தொடர் மழையால் மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

அபாயம் இல்லை

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் விஷ்ணு செய்தியாளர் களிடம் கூறும்போது, “தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் கவனமுடன் இருக்க அறிவுறுத்தப் பட்டுள்ளது. இப்போது அபாயம் எதுவுமில்லை. வழக்கமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. ஆற்றில் குளிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. அணைகளுக்கு நீர்வரத்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

பாளையங்கால்வாய் தூர்வாரப் பட்டு தண்ணீர் செல்வதற்கு வழி செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் 40 சதவீத குளங்கள் மட்டுமே நிரம்பியுள்ளன. திருநெல்வேலி மாநகரில் சாலைகளை சீரமைக்க வும், சாலைகளில் மாடுகள் திரிவதை தடுக்கவும் மாநகராட்சி ஆணையருடன் ஆலோசித்து நட வடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

தென்காசி

தென்காசி மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு பரவலாக மழை பெய்தது. நேற்று காலை 8 மணி வரை 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் அதிகபட்சமாக கருப்பாநதி அணையில் 17 மி.மீ. மழை பதிவானது. ராமநதி அணையில் 15 மி.மீ., கடனாநதி அணையில் 10 மி.மீ., தென்காசியில் 7.40 மி.மீ., குண்டாறு அணையில் 7 மி.மீ., சங்கரன்கோவிலில் 6 மி.மீ., அடவிநயினார் அணை, செங்கோட்டையில் தலா 5 மி.மீ., ஆய்க்குடியில் 4.20 மி.மீ., சிவகிரியில் 1 மி.மீ. மழை பதிவானது. நேற்று காலையில் இருந்து வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. அவ்வப்போது லேசான மழை பெய்தது.

அணைகள் நிலவரம்

குண்டாறு அணை முழு கொள்ளளவில் நீடிக்கிறது. நீர் வரத்து அதிகரித்ததால் கடனாநதி அணை மீண்டும் நிரம்பியது. 85 அடி உயரம் உள்ள இந்த அணையில் பாதுகாப்பு கருதி நீர்மட்டம் 83.50 அடியில் நிலை நிறுத்தப்பட்டு, அணைக்கு வரும் நீர் அப்படியே வெளியேற்றப்பட்டது. ராமநதி அணை நீர்மட்டம் 79.50 அடியாகவும், கருப்பாநதி அணை நீர்மட்டம் 66.28 அடியாகவும், அடவிநயினார் அணை நீர்மட்டம் 86.75 அடியாகவும் இருந்தது.

மலைப் பகுதியில் பெய்த மழையால் குற்றாலம் அருவிகளில் நீர் வரத்து அதிகரித்தது. வெள்ளப்பெருக்கு காரணமாக பிரதான அருவி, பழைய குற்றாலம் அருவி ஆகியவற்றில் குளிக்க தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x