

"வேளாண் சட்டங்களை எதிர்த்து புதுடெல்லியில் போராடுபவர்களில் ஒருவர் கூட விவசாயி கிடையாது" என பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்தார்.
அவர் காரைக்குடியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
இடைத்தரகர்கள் இன்றி விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்கவே வேளாண் சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. இந்தச் சட்டங்களால் உண்மையான விவசாயிகள் யாரும் பாதிக்கப்பட மாட்டார்கள். புதுடெல்லியில் போராடுபவர்களில் ஒருவர் கூட விவசாயி இல்லை.
மேலும் பாஜக கட்டுப்பாட்டில் ரஜினி இல்லை. கமல் எம்ஜிஆரின் விசுவாசியாக இருந்தால் எம்ஜிஆர் ஆட்சி கொண்டு வருவேன் எனக் கூறலாம்.
ஆனால், அவர் எம்ஜிஆர் விசுவாசியாக செயல்படவில்லை. அதனால் எம்ஜிஆர் ஆட்சி கொண்டு வருவேன் என்று கூறுவதற்கு கமலுக்கு உரிமை இல்லை.
ரஜினி ரசிகர்கள் ஏராளமானோர் திமுகவில் உறுப்பினர்களாக உள்ளனர். ரஜினி கட்சி ஆரம்பித்தால், அவரது கட்சிக்கு திமுகவிலிருந்து ஏராளமானோர் சென்றுவிடுவர். இது திமுகவுக்கு பலவீனம்.
மேலும் சினிமாவில் அரை குறை ஆடையுடன் ஆபாசமாக நடித்து கலாச்சாரத்தை கெடுத்த கமல் அரசியலுக்கு வரும்போது, ரஜினி வருவதில் எந்தத் தவறும் இல்லை. சமையல் சிலிண்டர் விலை ஏற்றம் தற்காலிகமானது தான். அரசியல் நாகரிமற்றவர் போல் ப.சிதம்பரம் செயல்படுகிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.