மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அரசிடம் 223 ஏக்கர் இடம் ஒப்படைப்பு: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அரசிடம் 223 ஏக்கர் இடம் ஒப்படைப்பு: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்
Updated on
1 min read

மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்காக 223 ஏக்கர் இடம் மத்திய அரசிடம் முழுமையாக ஒப்படைக்கப்பட்டுள்ளது என உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:

மத்திய அரசு தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என 2015 பிப்ரவரியில் மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது. எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட மதுரை தோப்பூரில் 2018-ல் இடம் தேர்வு செய்யப்பட்டது. இருப்பினும் கட்டுமானப் பணிகள் இன்னும் தொடங்கவில்லை. எனவே மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப்பணியை விரைவில் தொடங்கவும். அதற்கு போதுமான நிதி ஒதுக்கவும் மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது.

கூடுதல் அட்வகேட் ஜெனரல் கே.செல்லப்பாண்டியன் வாதிடுகையில், மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்காக 223 ஏக்கர் நிலத்தை தமிழக அரசு மத்திய அரசிடம் ஒப்படைத்துவிட்டது என்றார்.

உதவி சொலிசிட்டர் ஜெனரல் விக்டோரியா கெளரி, எய்ம்ஸ் மருத்துமவனைக்கான இடத்தை தமிழக அரசு முழுமையாக ஒப்படைத்துவிட்டது. தற்போது எய்ம்ஸ் கட்டுமானப் பணிக்காக ஜப்பான் நிறுவனத்துடன் ஒப்பந்தம் போடும் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஒப்பந்தப்பணி 2021 மார்ச் 31-ல் முடிவடையும். அன்றிலிருந்து 45 மாதங்களுக்கும் கட்டுமானப்பணிகள் முடிக்கப்படும் என்றார்.

தொடர்ந்து நீதிபதிகள், தமிழகத்துடன் வேறு சில மாநிலங்களிலும் எய்ம்ஸ் மருத்துவமனை அறிவிக்கப்பட்டது. அந்த மாநிலங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் தொடங்கிய நிலையில் தமிழகத்தில் மட்டும் ஏன் இன்னும் தொடங்கப்படவில்லை? ஜப்பானிய நிறுவனம் கரோனா காலத்திலும் பல்வேறு பணிகளை மேற்கொண்டுள்ளது. மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணியை தொடங்குவது குறித்து விரிவாக உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று கூறி விசாரணையை ஒத்திவைத்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in