

மதுரை யா.ஒத்தக்கடை அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளி அருகே செயல்படும் டாஸ்மாக் மதுபான கடையை இடமாற்றம் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் அருண், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:
மதுரை - சென்னை சாலையில் உத்தங்குடி வழிவிடும் பாண்டிகோவிலில் இருந்து 45 அடி தொலைவில் மதுபான கடை மற்றும் மதுபான கூடம் செயல்படுகிறது. இந்த மதுபான கடை அரசுக்கு சொந்தமானதா? தனியாருக்கு சொந்தமானதா? என்ற விவரப் பலகை எதுவும் இல்லை.
அருகே தனியார் மருத்துவமனை, சுகாதார பணியாளர் அலுவலகம் செயல்படுகிறது. மதுபான கூடத்துக்காக சம்பக்குளம் உத்தங்குடி நீர் வரத்து கால்வாயை ஆக்கிரமித்துள்ளனர். இந்த மதுபான கடை, மதுபான கூடத்தை மூட உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் கே.நீலமேகம், முகமது ரஸ்வி வாதிடுகையில், விதிகளை மீறி கோவில், மருத்துவமனை அருகே மதுபான கடை செயல்படுகிறது.
ஒத்தக்கடை அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளி அருகே டாஸ்மாக் கடை செயல்படுகிறது. இந்த கடையால் பள்ளி மாணவிகளுக்கு பாதிக்கப்படுகிறது என்றனர்.
இதையடுத்து, அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளி அருகேயுள்ள டாஸ்மாக் கடையை அங்கிருந்து இடமாற்றம் செய்து அறிக்கை தாக்கல் செய்யவும், உத்தங்குடி மதுபான கடை தொடர்பாக அதிகாரிகள் பதிலளிக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.