கரோனாவால் வேலையிழந்து பக்கவாதம் பாதித்து புரூனே நாட்டில் தவித்த சிவகங்கை இளைஞர்: தமிழகம் அழைத்து வர உதவிய கட்டிடத் தொழிலாளர்கள் சங்கம்

கரோனாவால் வேலையிழந்து பக்கவாதம் பாதித்து புரூனே நாட்டில் தவித்த சிவகங்கை இளைஞர்: தமிழகம் அழைத்து வர உதவிய கட்டிடத் தொழிலாளர்கள் சங்கம்
Updated on
1 min read

புரூனே நாட்டில் கரோனாவால் வேலையிழந்து பக்கவாதம் ஏற்பட்டு சிகிச்சைக்கு வழியில்லாமல் நாடு திரும்ப முடியாமல் தவித்த சிவகங்கை இளைஞரை, தமிழக கட்டிடத் தொழிலாளர்கள் சங்கம் முயற்சியால் இந்தியத் தூதரகம் மூலம் அவருக்கு தேவையான சிகிச்சைகள் வழங்கி இன்று அவரது சொந்த ஊருக்கு அழைத்து வரப்பட்டார்.

சிவகங்கை மாவட்டம் கன்னமங்கலத்தை சேர்ந்தவர் சுந்தர்ராஜ்(38). இவர் புரூனே நாட்டில் கட்டுமான வேலைக்குச் சென்றுள்ளார். டிரைவர் வேலையும் இவருக்கு தெரிந்திருந்ததால் அவர் பணிபுரிந்த கம்பெனியிலேயே இவருக்கு டிரைவர் பணி வழங்கியுள்ளனர்.

சிறப்பாக வாழ்க்கை சென்றுகொண்டிருந்த நேரத்தில் கனோனா தாக்கத்தால் சுந்தராஜ் வேலையிழந்தார். அன்றாட வாழ்க்கையை அயல்நாட்டில் ஓட்ட வழியில்லாமல் சிரமப்பட்டுள்ளார்.

நாடும் திரும்ப முடியாமல் கடும் மனஉளச்சலுக்கு ஆளாகி திடீரென்று பக்கவாதம் நோயால் பாதிக்கப்பட்டார். கரோனா காலம் என்பதால் இவரால் அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சைப்பெற முடியவில்லை. இவர் பணிபுரிந்த நிறுவனமும் இவருக்கு உதவி செய்யவில்லை. நாடு திரும்பவும், சிகிச்சைக்கு பணமும் இல்லாமல் தவித்துள்ளார். அவரை மீட்டு சொந்த ஊருக்கு அழைத்து வர ஏற்பாடு செய்ய வேண்டும் என்று அவரது குடும்பத்தினர் தமிழக கட்டிட தொழிலாளர்கள் மத்திய சங்க மதுரை தெற்கு மாவட்டத் தலைவர் வெங்கடேஷசனிடம் தெரிவித்துள்ளனர்.

அவர், இந்தத் தகவலை, சங்க மாநிலத் தலவர் பொன்குமார் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளார். அவர் புரூனே நாட்டில் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற முடியாமல் நாடு திரும்பாமல் தவிக்கும் சுந்தராஜை மீட்க வேண்டும் என்று இந்திய தூதரகம் மற்றும் சர்வதேச தொழிற்ச்சங்க நிர்வாகிகளிடம் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, புரூனே நாட்டின் இந்திய தூதரகம், பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட சுந்தராஜை மீட்டு புரூனே நாட்டிலே சிகிச்சை அளித்து தற்போது அவரை அவரது சொந்த மாவட்டமான சிவகங்கை மாவட்டத்திற்கு அழைத்து வர ஏற்பாடு செய்துள்ளது.

நேற்று புரூனே நாட்டில் இருந்து கோவை வந்த அவர், அங்கிருந்து கார் மூலம் மதுரை வழியாக சிவகங்கை அழைத்து வரப்பட்டார். புரூனே நாட்டில் கரோனாவால் வேலையை இழந்து பக்கவாதத்தால் பாதித்த இளைஞரை மீட்க உதவிய தமிழக கட்டிட தொழிலாளர்கள் சங்க நிர்வாகிகளுக்கு அவரது குடும்பத்தினர் நன்றி தெரிவித்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in