மத்திய அரசின் வேளாண் சட்ட நகலைக் கிழித்து எறிந்த புதுவை முதல்வர் நாராயணசாமி

வேளாண் சட்ட நகலைக் கிழிக்கும் முதல்வர் நாராயணசாமி.
வேளாண் சட்ட நகலைக் கிழிக்கும் முதல்வர் நாராயணசாமி.
Updated on
1 min read

விவசாயிகளுக்கு ஆதரவாக நடந்த உண்ணாவிரதத்தின் முடிவில் உரையாற்றியபோது, மத்திய அரசின் வேளாண் சட்ட நகலைப் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கிழித்து எறிந்தார்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக காங்கிரஸ் மற்றும் கூட்டணிக்கட்சிகள் சார்பில் புதுச்சேரி அண்ணா சிலை அருகே இன்று உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

இன்று காலை தொடங்கிய போராட்டம் மாலை நிறைவடையும்போது இறுதியாக முதல்வர் நாராயணசாமி வேளாண் சட்டங்கள் தொடர்பாகவும், ஆளுநர் கிரண்பேடியின் செயல்பாடுகள் தொடர்பாகவும் விமர்சித்துப் பேசினார்.

அவர் பேசுகையில், "மதச்சார்பற்ற அணியில் கருத்து வேறுபாடு இல்லை. மதச்சார்பற்ற அணி ஒருங்கிணைந்து புதுச்சேரியைக் காப்பாற்ற வேண்டும். மத்திய அரசு அதிகாரத்தை கொஞ்சம், கொஞ்சமாக நம்மிடம் இருந்து எடுத்து வருகிறது.

புதுச்சேரிக்கு மிகப்பெரிய ஆபத்து உள்ளது. ஜம்மு- காஷ்மீரை மோடி இரண்டாக உடைத்து யூனியன் பிரதேசமாக்கினார். அதேபோல் புதுச்சேரி மாநிலத்தைத் தமிழகத்தோடு இணைக்கும் அனைத்து முயற்சிகளையும் மத்திய அரசு எடுக்கும். அதற்கு மதச்சார்பற்ற அணியினர் ஒற்றுமையாக இருக்கவேண்டும். மதவாத சக்திகளை முறியடிக்க வேண்டும்" என்று குறிப்பிட்டார்.

அப்போது திடீரென மத்திய அரசின் வேளாண் சட்ட நகலைக் கிழித்தெறிந்து தனது எதிர்ப்பைத் தெரிவிப்பதாகக் குறிப்பிட்டார். அதைத் தொடர்ந்து முதல்வர் உட்படக் கட்சி நிர்வாகிகள் அனைவரும் குளிர்பானம் அருந்தி உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in