

மதுரையில் கரோனா வேமாகப் பரவிய காலத்தில் உயிரைப் பணையம் வைத்து வீடு, வீடாக காய்சல் நோயாளிகளைக் கண்டறிய சர்வே செய்த எங்களுக்கு ஊதியம் வழங்கவில்லை என்று கரோனா ஊரடங்கு காலத்தில் தற்காலிகப் பணியாளர்களாக பணிபுரிந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் இன்று மாநகராட்சி அலுவலகத்தை முற்றுயைிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கரோனாவுக்கு முதல் உயிர்ப் பலி ஏறபட்டு உச்சமாகப் பரவிய காலத்தில் மதுரை மாநகராட்சியில் காய்ச்சல் நோயாளிகளை கண்டறியவும், அவர்களை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரவும் ஒப்பந்தஅடிப்படையில் தற்காலிகமாக 1,450 படித்த இளைஞர்களை சுகாதாரத்துறைக்கு பணிக்கு எடுத்தனர். இவர்களுக்கு ஒப்பந்ததாரர்கள் மூலம் மாதம் ரூ.7,250 ஊதியம் வழங்கினர். முதல் இரண்டு மாதம் முறையாக ஒப்பந்ததாரர் ஊதியம் வழங்கியுள்ளார். மூன்றாவது மாதம் 23 நாள் பணிபுரிந்தநிலையில் கரோனா கட்டுக்குள் வந்தநிலையில் இவர்களை பணிக்கு வர வேண்டாம் என்று கூறியுள்ளனர்.
ஆனால், தற்போது வரை அந்த மூன்றாவது மாதத்தில் 23 நாட்கள் பணிபுரிந்த நாட்களுக்கான ஊதியத்தை ஒப்பந்தாரர் வழங்கவில்லை.
மாநகராட்சி சுகாதாரத்துறையும், அந்த ஊதியத்தை ஒப்பந்ததாரிடம் இருந்து பெற்றுக் கொடுக்க முயற்சி செய்யவில்லை. அதனால், பாதிக்கப்பட்ட இளைஞர்கள், கடந்த 3 மாதமாக மாநகராட்சி, ஆட்சியர் அலுவலகத்தில் முறையிட்டும் ஊதியத்தை இதுவரை அவர்களால் பெற முடியவில்லை.
ஆத்திரமடைந்த பாதிக்கப்பட்ட இளைஞர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நேற்று திரண்டு மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். ஒரு கட்டத்தில் மாநகர சுகாதாரத்துறை அதிகாரி அலுவலகம் முன் தர்ணாப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தவகல் அறிந்த போலீஸார், பாதிக்கப்பட்ட இளைஞர்களிடமும், ஊதியம் வழங்க வேண்டிய ஒப்பந்ததாரரையும் அழைத்து பேசினர். அவர்கள், மூன்று நாளில் ஊதியம் வழங்குவதாக உறுதியளித்தனர். ஆனால், போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள், இதே வாக்குறுதியை மூன்று மாதமாக சொல்லிக் கொண்டிருக்கின்றனர் என்றும், உடனே இன்று ஊதியம் வழங்க வேண்டும் என்றும், அதுவரை போராட்டத்தை கைவிட மாட்டோம் என்றும் முறையிட்டனர். அதனால், இன்று மாலை வரை இளைஞர்கள் மாநராட்சி அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
போராட்டத்தில் பங்கேற்ற இளைஞர் சத்தியா கூறியதாவது; கரோனா ஊரடங்கு நேரத்தில் யாரும் வீட்டை விட்டு வெளியே வரவே அஞ்சினர். ஆனால், நாங்கள் வேலையில்லாத காரணத்தாலும், குடும்பத்தை ஓட்டவும் உயிரை பனையும் வைத்து இந்த வேலைக்கு வந்தோம். மாநகராட்சி சுகாதாரத்துறை கூறியபடி நாங்கள் பாசிட்டிவ் நோயாளிகளை கண்டறிய ஒவ்வொரு வார்டு வார்டாக வீடு வீடாகச் சென்று ஆய்வு செய்தோம். பலருக்கு அந்த நேரத்தில் கரோனாவும் வந்தது. ஆனாலும் நாங்கள் வேலை செய்து கொண்டிருந்தோம். எங்களுடைய இந்த பணியால் தற்போது மதுரையில் கரோனா நோய் கட்டுக்குள் வந்துள்ளது. ஆனால், எங்களுக்கு முதல் 2 மாதம் மட்டுமே ஊதியம் வழங்கினர். மூன்றாவது மாதத்திற்கான ஊதியத்தை வழங்கவில்லை. ஆட்சியரிடம், மாநகராட்சி ஆணையரிடம் முறையிட்டோம். அவர்கள் நாங்கள் அவர்களுக்கு நிதியை ஒதுக்கிவிட்டோம் அவர்களிடம் கேட்டுப்பெற்றுக் கொள்ளுங்கள் என்கின்றனர். வாங்கிக் கொடுக்க முயற்சி செய்யவில்லை. கடந்த சில நாட்களுக்கு முன் சுகாதாரத்துறை அதிகாரியிடம் பேசியபோது வெள்ளிக்கிழமைக்குள் உங்களுக்கு ஊதியம் கிடைக்காவிட்டால் நான் பொறுப்பு என்றார். அவர் கூறியப்படி ஊதியம் இன்று கிடைக்காததால் மாநகராட்சி அலுவலகத்திற்கு திரண்டு வந்துள்ளோம்.
இதேபோல், பாதிக்கப்பட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஒன்றினைவது கஷ்டம். ஆனால், ஊதியம் கிடைக்கிற வரை போராட்டத்தை கைவிடமாட்டோம், ’’ என்றார்.