

தமிழக மீனவர்கள் கடலுக்குச் சென்று சுதந்திரமாக மீன் பிடிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் என்று மத்திய கனரக தொழில்துறை மற்றும் பொதுத் துறை இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நம்பிக்கையுடன் கூறினார்.
அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு முதல்முறையாக சனிக் கிழமை சென்னை வந்த பொன்.ராதாகிருஷ்ணனுக்கு விமான நிலையத்தில் பாஜகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். அங்கிருந்து தி.நகரில் உள்ள மாநில பாஜக தலைமை அலுவலகத்துக்கு வந்த அவரை தொண்டர்கள் பூரணகும்ப மரியாதை அளித்து வரவேற்றனர்.
பின்னர் நிருபர்களிடம் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியதாவது:
தமிழக மீனவர்கள் கடலுக்குச் சென்று சுதந்திரமாக மீன் பிடித்து, பத்திரமாக வீடு திரும்ப வேண்டும் என்பது நமது எதிர்பார்ப்பு. அதை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகளை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் மேற்கொண்டு வருகிறார். ஆப்கானிஸ்தானில் தமிழக பாதிரியார் கடத்தப்பட்ட சம்பவம் துரதிஷ்டவசமானது. அவரை மத்திய அரசு பத்திரமாக மீட்டு கொண்டுவரும்.
தமிழகத்தில் திருச்சி பெல், ஊட்டி இந்துஸ்தான் போட்டோ பிலிம்ஸ் உள்ளிட்ட 4 பெரிய நிறுவனங்கள் உள்ளன. இவை அனைத்தையும் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். எனது துறை மூலம் தமிழகத்துக்கு என்னென்ன செய்ய முடியுமோ அதை எல்லாம் செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும். மற்ற துறைகள் மூலம் செய்ய வேண்டியதையும் கேட்டுப் பெறுவோம்.
காவிரி நீர் பங்கீட்டு விவகாரத் தில் கர்நாடகம் அதன் நிலைப் பாட்டை கூறுகிறது. நாம் நமது உரிமையை கேட்பதில் உறுதியாக இருப்போம். இந்தப் பிரச்சினையை மத்திய அரசு நடுநிலையுடன் அணுகி, தமிழகத்துக்கான நீரை பெற்றுத் தரும். தமிழக பாஜகவுக்கு யாரை தலைவராக நியமிப்பது என்பது குறித்து கட்சித் தலைமை முடிவெடுக்கும்.
இவ்வாறு பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.
தொண்டர்களுக்கு அறிவுரை
கட்சித் தொண்டர்களிடையே பேசிய பொன்.ராதாகிருஷ்ணன், ‘‘மாவட்ட வாரியாக மக்களின் தேவைகளை அறிந்து மாநிலத் தலைமைக்கு கட்சி நிர்வாகிகள் தெரிவிக்க வேண்டும். மத்திய அமைச்சராக ஆனாலும், எப்போதும் தொண்டர்களின் ஊழியனாகவே இருப்பேன். தலைவர்களின் காலில் விழுவதை தொண்டர்கள் தவிர்க்க வேண்டும். ஆளுயர மாலை, கிரீடம் அணிவிப்பதை நான் விரும்பாதவன். அதையும் தொண்டர்கள் தவிர்க்க வேண்டும்’’ என்றார்.