தமிழகத்தில் சமையல் எண்ணெய் பேக்கிங் செய்யாமல் விற்க தடை: உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

தமிழகத்தில் சமையல் எண்ணெய் பேக்கிங் செய்யாமல் விற்க தடை: உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு
Updated on
1 min read

தமிழகத்தில் சமையல் எண்ணெய் பேக்கிங் செய்யாமல் விற்க இடைக்கால தடை விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதுரை மேலூரைச் சேர்ந்த வழக்கறிஞர் அருண்நிதி, உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு:

சமையல் எண்ணெய்யில் முந்திரி தோலிருந்து எடுக்கப்படும் திரவம் கலக்கப்படுகிறது. இந்த கலப்பட எண்ணெய்யால் நுகர்வோர்களுக்கு கல்லீரல் பாதிப்பு, புற்றுநோய் பாதிப்பு ஏற்படுகின்றன. சட்டப்படி சமையல் எண்ணெய்யை பேக்கிங் செய்யாமல் சில்லைறைக்கு விற்பனை செய்யக்கூடாது.

எனவே, கலப்பட எண்ணெய் விற்பனைக்கு தடை விதித்து, உணவு பாதுகாப்பு சட்டப்படி சமையல் எண்ணெய் விற்பனை செய்வதை உறுதிப்படுத்தவும், சமையல் எண்ணெய் கலப்படத்தில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. பின்னர் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு
மக்களின் உடல் நலனை கெடுக்கும் வகையில் சமையல் எண்ணெய்யில் கலப்படம் செய்யப்படுவது அதிர்ச்சியளிக்கிறது.

ஒவ்வொருவரும் சுகாதாரமான உணவு உட்கொள்வது என்பது அரசியலமைப்பு சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளில் ஒன்றாகும். இதனால் ஒவ்வொருவருக்கும் கலப்படம் இல்லாமல் சத்தான உணவு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டியது அரசுகளின் கடமையாகும். இதற்காகவே உணவு பாதுகாப்பு மற்றும் கலப்பட தடுப்பு சட்டம் கொண்டுவரப்பட்டது.

கலப்பட சமையல் எண்ணெய் உடல் நலனை கெடுப்பதுடன் இறப்பையும் விளைவிக்கும். கடுமையான நடவடிக்கை எடுக்காவிட்டால் எண்ணெய் கலப்படத்தை தடுக்க முடியுாது. எனவே, எந்த விதத்திலும் சமையல் எண்ணெய்யை பாக்கிங் செய்யாமல் (லூஸ்) விற்பனை செய்ய தடை விதிக்கப்படுகிறது.

மேலும் கலப்பட எண்ணெய் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண, தமிழ் திரையுலகை காப்பாற்ற திருட்டு சிடி தயாரிப்போரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய சட்டத்திருத்தம் கொண்டு வந்தது போல், சமையல் எண்ணெய் கலப்படத்தில் ஈடுபடுவோரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்யும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டு வர வேண்டும்.

மேலும், உணவு பாதுகாப்பு விதிகளில் பாக்கிங் செய்யாமல் சமையல் எண்ணெய் விற்க தடை உள்ள போது, எவ்வாறு பாக்கிங் செய்யாமல் சமையல் எண்ணெய் விற்பனை செய்யப்படுகிறது? பாமாயிலுடன் 0.25 சதவீத முந்திரி கொட்டை திரவம் சேர்த்தால் நல்லெண்ணெய் போலவும், 0.25 சதவீத வேர்கடலை திரவத்தை ஒலின் எண்ணெய்யுடன் சேர்த்தால் கடலை எண்ணெய் போலவும் மாற்ற முடியுமா? அதனால் என்ன விளைவுகள் ஏற்படும்?

கலப்பட எண்ணெய்யால் நுகர்வோர்களுக்கு என்னென்ன உடல் நலக்குறைவுகள் ஏற்படும்? எண்ணெய் கலப்படத்தில் ஈடுபடுவோர்களை ஏன் குண்டர் சட்டத்தில் கைது செய்யக்கூடாது? என்பது தொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க வேண்டும். விசாரணை ஜனவ. 18-க்கு ஒத்திவைக்கப்படுகிறது.

இவ்வாறு நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in