Published : 05 Oct 2015 01:51 PM
Last Updated : 05 Oct 2015 01:51 PM

கலங்கரை விளக்கம் அருகே பறக்கும் ரயில் தடம் புரண்டது: ரயில் சேவை முடங்கியது; பயணிகள் அவதி

வேளச்சேரியில் இருந்து கடற்கரை நோக்கி வந்த பறக்கும் மின்சார ரயில், கலங்கரை விளக்கம் ரயில் நிலையம் அருகே திடீரென தடம்புரண்டது. அதிர்ஷ்டவசமாக பயணிகள் காயமின்றி தப்பினர். விபத்து காரணமாக கடற்கரை - வேளச்சேரி இடையே பல மணி நேரம் ரயில் சேவை பாதிக்கப் பட்டதால், பயணிகள் அவதிக் குள்ளாகினர்.

சென்னை கடற்கரை வேளச் சேரி இடையே அதிகாலை முதல் நள்ளிரவு வரை பறக்கும் மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதில் ஆயிரக்கணக்கானோர் பயணம் செய்கின்றனர். நேற்று மதியம் 12 மணி அளவில் வேளச்சேரியில் இருந்து 9 பெட்டிகளுடன் புறப்பட்ட மின்சார ரயில் கடற்கரை மார்க்கத்தில் வந்துகொண்டிருந்தது. முண்டகக்கண்ணி அம்மன் கோயில் ரயில் நிலையத்தில் இருந்து கிளம்பி, கலங்கரை விளக்கம் ரயில் நிலையம் அருகே மதியம் 12.35 மணி அளவில் வந்தபோது, திடீரென தண்டவாளத்தில் இருந்து சத்தம் வந்தது. உடனடியாக ரயிலை நிறுத்திவிட்டு, ஓட்டுநர் கீழே இறங்கிப் பார்த்தார். சில பயணிகளும் இறங்கிப் பார்த்தனர். அப்போது, ரயிலின் 8-வது பெட்டியில் 4 சக்கரங்கள் தண்டவாளத்தை விட்டு இறங்கி, தடம் புரண்டிருப்பது தெரியவந்தது.

இதையடுத்து இரு மார்க்கங் களிலும் ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. கடற்கரை வேளச்சேரி இடையே ரயில் சேவை முற்றிலும் தடைபட்டது. இதனால், பயணிகள் பெரும் அவதியடைந்தனர். பலர் பேருந்து, ஆட்டோக்களில் சென்றனர். நிலையங்களில் அல்லாமல் சில ரயில்கள் நடு வழியிலேயே நிறுத்தப்பட்டன. அதில் இருந்து இறங்கவும் முடியாமல் பயணிகள் வெகு நேரம் ரயிலிலேயே காத்திருந்தனர். சிலர் தண்டவாளத்தில் இறங்கி நடந்துசென்றனர்.

இதற்கிடையில், பழுது நீக்கும் ரயிலுடன் தொழில்நுட்ப அலுவலர்கள் சம்பவ இடத்துக்கு வந்தனர். தடம்புரண்ட ரயில் மதியம் 2.35 மணி அளவில் நிலைநிறுத்தப்பட்டது. பின்னர், தொழில்நுட்ப அதிகாரிகள் தலைமையில், பழுதான தண்ட வாளத்தை சரிசெய்யும் பணி தொடங்கியது. ரயில் தடத்திலும், ரயில் பெட்டிகளிலும் பல்வேறு ஆய்வுகள் நடத்தப்பட்டன. மாலை 5 மணிக்கு பிறகு, படிப்படியாக ரயில்கள் அந்த வழியாக இயக்கப் பட்டன. பறக்கும் ரயில் வழித்தடத் தில், இதுபோன்ற விபத்து நடப்பது முதல் முறை என்று அதிகாரிகள் கூறினர். தெற்கு ரயில்வே பொது மேலாளர் வசிஷ்ட ஜோஹ்ரி மற்றும் ரயில்வே அதிகாரிகள் நேரில் வந்து ஆய்வு நடத்தினர்.

பயணிகள் அதிர்ச்சி

தடம்புரண்ட ரயிலில் இருந்த பயணிகள் கூறியபோது, ‘‘முண்டகக்கண்ணி அம்மன் கோயில் ரயில் நிலையத்தைக் கடந்த சில நிமிடங்களில் திடீரென சத்தம் கேட்டது. ரயில்களில் வழக்கமாக வரும் சத்தம் என்று நினைத்தோம். ரயில் நின்றவுடன் இறங்கிப் பார்த்தோம். தண்டவாளத்தில் இருந்து சக்கரங்கள் விலகி கீழே இறங்கியிருந்தன. வழக்கமாக இந்த வழித்தடத்தில் சிக்னல் கோளாறுகள் ஏற்படும். அப்போது முக்கால் மணி நேரம் ரயில் சேவை பாதிக்கப்படும். தற்போது ரயில் தடம் புரண்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இனி, இதுபோல நடக்காமல் இருக்க தெற்கு ரயில்வே நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

4 பேர் குழு விசாரணை

இந்த விபத்து ரயில் பெட்டி யால் நடந்ததா, தண்டவாளத்தால் ஏற்பட்டதா என்று பல்வேறு கோணங்களில் ரயில்வே அதிகாரி கள் ஆய்வு நடத்தி வருகின்றனர். விபத்து குறித்து முழுமையாக விசாரித்து காரணத்தைக் கண்டறிய 4 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு குழு விரைவில் விசாரணையை தொடங்கவுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x