Published : 18 Dec 2020 06:03 PM
Last Updated : 18 Dec 2020 06:03 PM

சமையல் சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெறுக: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தீர்மானம்

சென்னை

சமையல் எரிவாயு உருளையின் விலையை முன்னறிவிப்பின்றி உயர்த்தியிருப்பதும், வங்கி மூலம் வழங்கப்படும் மானியத் தொகை முழுமையாக வழங்கப்படாததும், அடித்தட்டு மக்களுக்கும், நடுத்தர வகுப்பினருக்கும் ஏற்படுத்தியுள்ள மனஉளைச்சலை அதிகார வர்க்கம் உணர்ந்து செயல்படுகிறதா என்ற கேள்வி எழுகிறது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி விமர்சித்துள்ளது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு கூட்டம் நேற்று சென்னையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் டி.கே. ரங்கராஜன், அ. சவுந்தரராசன், உ. வாசுகி, பி. சம்பத் மற்றும் மாநில செயற்குழு, மாநிலக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:

ஐஐடி நிறுவனங்களில் இட ஒதுக்கீட்டு உரிமையைப் பறிக்க மத்திய அரசு முயற்சி

வி.பி.சிங் தலைமையிலான மத்திய அரசு பிற்பட்ட மக்களுக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் இட ஒதுக்கீடு வழங்கிட வேண்டுமென்ற மண்டல் குழுவின் பரிந்துரையை ஏற்று அமலாக்க முடிவு செய்தது. பின்னர் மண்டல் கமிஷன் பரிந்துரைபடி இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்க வழிவகை செய்யும் வகையில் அரசியல் அமைப்புச் சட்டத்தில் 93-வது திருத்தம் செய்யப்பட்டது.

இந்த திருத்தமும், இதர பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கும் தனிச் சட்டமும் செல்லுபடியாகும் என்று உச்ச நீதிமன்ற அரசியல் சட்ட அமர்வு தீர்ப்பு கூறியது. அதனைத் தொடர்ந்து இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. முன்னதாகவே அரசியல் சட்ட அடிப்படையில் தலித் மற்றும் பழங்குடியின வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், மத்திய அரசினால் அமைக்கப்பட்ட ராம் கோபால் ராவ் தலைமையிலான குழு, தொழில் நுட்ப நிறுவனங்களான ஐ.ஐ.டி.க்களில் இதர பிற்படுத்தப்பட்டோர், பட்டியல் இனத்தவர் மற்றும் பழங்குடியினருக்கு இட ஒதுக்கீடு முறை அவசியமில்லை எனவும், ஆசிரியர் பணியிடங்களிலும் இட ஒதுக்கீடு கூடாது எனவும் பரிந்துரைத்துள்ளது.

இது சமூக நீதியைக் குழி தோண்டிப் புதைத்து, உயர்க் கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட சமூகங்களுக்கு கிடைத்து வரும் கல்வி மற்றும் வேலை வாய்ப்பை பறிக்கும் முயற்சியாகும்.

இந்திய நாட்டில் சமூக நீதி அடிப்படையில் விளிம்பு நிலை மக்களுக்கு கிடைத்து வரும் குறைந்த பட்ச வாய்ப்பைக் கூட பறிக்கும் பாஜக அரசின் நடவடிக்கைகளை சிபிஐ (எம்) மாநிலக்குழு வன்மையாக கண்டிப்பதோடு, அப்பரிந்துரையை நிராகரித்து, ஐ.ஐ.டி. உள்ளிட்ட உயர்க்கல்வி நிறுவனங்களிலும் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் இட ஒதுக்கீட்டை தொடர்ந்து அமல்படுத்த வேண்டுமென்று மத்திய அரசை சிபிஐ (எம்) மாநிலக்குழு வலியுறுத்துகிறது.

மத்திய அரசே சமையல் எரிவாயு விலை உயர்வை திரும்ப பெறுக

கோவிட் -19 தொற்று மிகக் கொடூரமாக பாதித்து வந்துள்ள இக்கால கட்டத்தில், பெருவாரியான மக்கள் தங்களின் வாங்கும் சக்தியை, வாழ்வாதாரத்தை இழந்து நெருக்கடிகளை சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இவ்வாறு மோசமான நிலைமைகள் நீடித்து வரும் நிலையில் கடந்த 20 நாட்களில் சமையல் எரிவாயுவின் (கேஸ்) விலை ரூ. 100/- உயர்த்தியிருப்பது அடுப்பை பற்ற வைக்காமலே எரிகிற சூழல் (கோபம்) உருவாகியுள்ளது.

சமையல் எரிவாயு உருளையின் விலையை முன்னறிவிப்பின்றி உயர்த்தியிருப்பதும், வங்கி மூலம் வழங்கப்படும் மானியத் தொகை முழுமையாக வழங்கப்படாததும், அடித்தட்டு மக்களுக்கும், நடுத்தர வகுப்பினருக்கும் ஏற்படுத்தியுள்ள மனஉளைச்சலை அதிகார வர்க்கம் உணர்ந்து செயல்படுகிறதா என்ற கேள்வி எழுகிறது.

கடந்த நவம்பர் 20-ந் தேதி முதல் பெட்ரோல் - டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 2018 செப்டம்பர், அக்டோபர் மாதங்களுக்கு இணையாகவும், 2018 செப்டம்பரில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 78.89 டாலராக இருந்தது. தற்போது கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 50 டாலருக்கும் கீழே உள்ள நிலையில் விலை உயர்வை எப்படி நியாயப்படுத்த முடியும்.

கலால் வரியை குறைப்பதற்கு மாறாக, கரோனா காலத்தில் கூட இரண்டு முறை கேஸ் சிலிண்டர் விலையை உயர்த்தி மக்களிடமிருந்து கொள்ளையடிப்பது ஏற்க இயலாது.

சர்வதேச சந்தையில் விலைகுறைந்தால், இங்கேயும் விலை குறையும் என வசீகரமாக பேசியவர்கள் சர்வதேச சந்தையில் விலை குறையும் போது, இங்கு ஏன் விலையை உயர்த்த வேண்டும்?.

வேலைவாய்ப்பு சுருங்கியும் - இல்லாத சூழலும் - அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வும் ஏற்பட்டுள்ள இச்சூழலில் மக்களை மேலும், மேலும் கடும் சிரமத்திற்கு உள்ளாக்கும் அநியாய கேஸ் விலை உயர்வை கண்டிப்பதோடு, உடனடியாக விலை உயர்வை திரும்ப பெற உரிய தலையீடு செய்ய வேண்டுமென மத்திய - மாநில அரசுகளை சிபிஐ (எம்) மாநிலக்குழு வலியுறுத்துகிறது.

ஆயுர்வேத மருத்துவர்கள் அலோபதி முறையில் அறுவைசிகிச்சை செய்ய வெளியிடப்பட்ட அறிவிக்கையை கைவிடுக

தேசிய கல்விக்கொள்கை 2020, ''ஆயுஷ்'' என்றழைக்கப்படும் 'இந்திய மருத்துவமுறைகளை ''அலோபதி'' என்றழைக்கப்படும் நவீன அறிவியல் மருத்துவத்துடன் இணைத்து ''கலவை'' மருத்துவமுறையை (MIXOPATHY) உருவாக்கவேண்டும்' என்று வலியுறுத்துகிறது. இதன் அடிப்படையில் ''நிதி ஆயோக்'' அமைத்த துணைக்குழு கி.பி.2030க்குள் இந்தக் கலவை முறையை (MIXOPATHY) நடைமுறைப்படுத்துமாறு ''ஆயுஷ்" மற்றும் "மக்கள் நல்வாழ்வுத்துறை" அமைச்சகங்களுக்கு அறிவுறுத்தியதன் அடிப்படையில், இந்திய மருத்துவ மத்தியக் கவுன்சில் (Central Council of Indian Medicine) இந்த அறிவிக்கையை வெளியிட்டுள்ளது.

இந்திய மருத்துவ முறைகளைப் போதிய நிதி ஆதாரம் மற்றும் அறிவியல் ஆராய்ச்சியுடன் கூடிய வளர்ச்சியை உறுதிப்படுத்துவதன் மூலம், அவற்றின் தனித்தன்மையைப் பாதுகாத்து வளர்த்தெடுக்கவேண்டும். மாறாக, மத்திய அரசின் ஆயுஷ் அமைச்சகத்தின் நடவடிக்கைகள், நவீன மருத்துவத்தை சீர்குலைப்பதுடன், இந்திய மருத்துவ முறைகளை நாளடைவில் முற்றாக அழித்துவிடும். மேலும், பணம் படைத்தோர் ''நவீன மருத்துவ கார்ப்பரேட்'' மருத்துவமனைக்கு செல்லும் போது, ஏழை எளிய மக்கள் இத்தகைய ‘கலவை' மருத்துவத்தை நம்பியிருக்க வேண்டியிருக்கும்.

மருத்துவ ரீதியாக மிகுந்த பாதுகாப்பு முறைகளைப் பின்பற்றி செய்ய வேண்டிய அறுவைசிகிச்சை முறைகளை - நவீன மயக்கவியல் அறிவோ அல்லது ஆண்டிபயாட்டிக் போன்ற மருந்துகளின் பயன்பாடோ தெரியாமல், அறுவை சிகிச்சை செய்வது மனித உயிர்களோடு விளையாடுவது போன்றது. அதிக அளவில் பின்விளைவுகள் (Complication) ஏற்பட வாய்ப்புள்ளதால், மக்கள் பாதிப்புக்கு உள்ளாவார்கள்

மேலும் பல்வேறு வழக்குகளில் உச்ச நீதிமன்றம் முதல் பல்வேறு உயர்நீதிமன்றங்கள் வரை, மருத்துவர்கள் தான் பயின்ற மருத்துவமுறையை மட்டுமே பின்பற்றி சிகிச்சை அளிக்க வேண்டுமெனவும், தான் படிக்காத - பயிற்சி பெறாத மருத்துவமுறைகளை பின்பற்றினால், அது தண்டனைக்குறிய குற்றம் என்று தீர்ப்பளித்திருக்கின்றன.

எனவே, மத்திய அரசு இதுபோன்ற 'கலவைமுறை' மருத்துவத்திட்டத்தை உடனடியாகக் கைவிடவேண்டும், நவீன அறிவியல் மருத்துவம் மற்றும் இந்திய மருத்துவ முறைகளின் தனித்துவத்தைப் பாதுகாத்து - போதிய நிதியளித்து, ஊக்கப்படுத்தி - வளர்க்க வேண்டும். மக்கள் தொகைக்கு ஏற்றவாறு அதிக எண்ணிக்கையில் அரசு மருத்துவக்கல்லூரிகளையும், மருத்துவமனைகளையும் உருவாக்கிட வேண்டுமென மத்திய, மாநில அரசுகளை சிபிஐ (எம்) மாநிலக்குழு வலியுறுத்துகிறது.

கோவிட்-19 தடுப்பூசியை இலவசமாக வழங்கிட நடவடிக்கை எடுத்திடுக

கோவிட்-19 தொற்று தடுப்பு மற்றும் சிகிச்சைப்பணியில் சிறப்பாக பணியாற்றிய அனைத்து அரசு மருத்துவர்களுக்கும், பிற மருத்துவத்துறை ஊழியர்களுக்கும் முதல்வரால் அறிவிக்கப்பட்ட ''சிறப்பு ஊதியத்தை'' இன்னும் அளிக்காமல் இழுத்தடிப்பதை சிபிஐ (எம்) மாநிலக்குழு வன்மையாக கண்டிப்பதோடு, அதனை உடனடியாக விரைந்து வழங்கிட வேண்டுமெனவும் வலியுறுத்துகிறது.

மக்கள், கோவிட்-19 தொற்று அபாயத்திலிருந்து இன்னும் முழுமையாக விடுபடாத நிலையில், இதற்காக ஏற்படுத்தப்பட்ட ''சிறப்பு மருத்துவமையங்களை'' தொடர்ந்து பராமரிக்கவேண்டும். கோவிட் தொற்று முழுமையாகக் கட்டுப்படுத்தப்பட்ட பின்பும் அவ்வப்போது மக்களை அச்சுறுத்துகிற ''டெங்கு'' போன்ற தொற்று நோய்களுக்கு சிகிச்சை அளிக்க ஏதுவாக, அவற்றை "தொற்று நோய் மருத்துவமனைகளாக" தொடர்ந்து பராமரிக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.

கோவிட்-19 தடுப்பூசிகளை அனைத்துத் தரப்பு மக்களுக்கும் இலவசமாக அளித்திட மாநில அரசு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டுமென சிபிஐ (எம்) மாநிலக்குழு வலியுறுத்துகிறது.

மினி கிளினிக்களுக்கு மருத்துவர், செவிலியர், ஊழியர்கள் புதியதாக நிரந்தர அடிப்படையில் பணியமர்த்திடுக

சமீபத்தில் ஏற்படுத்தப்பட்டு வரும் ''மினி கிளினிக்குகளை'' ஏற்கனவே மருத்துவ வசதி இல்லாத இடங்களில் புதிய கட்டமைப்பை உருவாக்கி ஏற்படுத்தவேண்டும். அதில் பணிபுரிய தேவையான மருத்துவர், செவிலியர், உதவியாளர் ஆகியோரை புதியதாக தேர்வு செய்து நிரந்தர அடிப்படையில் பணியமர்த்தவேண்டும். மாறாக, ஏற்கனவே பற்றாக்குறை உள்ள மருத்துவமனைகளிலிருந்து ''மாற்றுப்பணி'' அடிப்படையில் பணியமர்த்துவது உரிய பலனைத்தராது என்பதுடன், ''தேர்தலுக்கான அரசியல்'' விளையாட்டாகவே பார்க்கப்படும் என்பதை சிபிஐ (எம்) மாநிலக்குழு சுட்டிக்காட்டுகிறது.

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணிகளை துவங்கிடுக

2015-ம் ஆண்டு மத்திய பட்ஜெட் தாக்கலின் போது தமிழகத்தில் மதுரை அருகே, தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ரூ.1,264 கோடி மதிப்பிலான, சுமார் 201.75 ஏக்கர் நிலத்தில் அமையவுள்ள மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கடந்த 2019ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். இம்மருத்துவமனை 2022-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்திற்குள் கட்டி முடிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.

ஆனால், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான அறிவிப்பு படோடோபமாக வெளியாகி பல ஆண்டுகள் கடந்தும் இன்னும் “'நிலம் கையகப்படுத்துதல்'' உட்பட பல அடிப்படை வேலைகள் எதுவும் துவங்காமல் வெறும் வெற்று அறிவிப்பாகவே உள்ளது. தென்மாவட்ட மக்களுக்கு மருத்துவ சிகிச்சைக்கு பலன் தரும் எய்ம்ஸ் மருத்துவமனையை அமைப்பதற்கு மத்திய, மாநில அரசுகளுக்கு எந்த அக்கறையும் இல்லை என்பதாலேயே மேற்கண்ட பணிகள் துவங்கப்படாமல் உள்ளது என்பதை சிபிஐ (எம்) மாநிலக்குழு சுட்டிக்காட்டுகிறது.

எனவே, மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான பணிகளை உடனடியாக துவங்கிட வேண்டுமெனவும், ஏற்கனவே திட்டமிட்டப்படி 2022ம் ஆண்டிற்குள் கட்டி முடித்து மக்கள் செயல்பாட்டிற்கு கொண்டு வருவதற்கு மத்திய, மாநில அரசுகள் உத்தரவாதமளிக்க வேண்டுமெனவும் சிபிஐ (எம்) மாநிலக்குழு மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்துகிறது.

MRB செவிலியர்களை பணி நிரந்தரம் செய்திடுக

தமிழக அரசு, மருத்துவ பணிகள் தேர்வாணையம் (Medical Recuitment Board) மூலம் கடந்த 2015-ம் ஆண்டு 7243 செவிலியர்களையும், அதன் தொடர்ச்சியாக இன்றுவரை சுமார் 10,000-க்கும் மேற்பட்ட செவிலியர்களை மருத்துவ பணிகள் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்து மருத்துவமனைகள், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ரூ.7,700/- ஊதியத்தில் செவிலியராக பணியமர்த்தியது.

பணியில் சேர்ந்த இரண்டு வருடத்தில் காலமுறை ஊதியம் வழங்கி பணிநிரந்தரம் செய்யப்பட்டும் என பணி நியமன ஆணையில் குறிப்பிடப்பட்டிருந்தும், ஆறு வருடங்களில் 2000 பேர் மட்டுமே பணி நிரந்தரம் செய்யப்பட்டுள்ளனர். மீதியுள்ளோர் பணி நிரந்தரம் செய்யப்படாமல் ஒப்பந்த செவிலியர்களாகவே இன்று வரை பணியாற்றி வருகின்றனர். நிரந்தர செவிலியர்களுக்கு இணையாக அரசு மருத்துமனையின் அனைத்து பிரிவுகளிலும் இவர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

“தமிழ்நாடு எம்.ஆர்.பி. செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம்” சார்பாக, கடந்த 2017ம் ஆண்டு நவம்பர் மாதம் பணி நிரந்தரம் செய்திட வலியுறுத்தி, சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட செவிலியர்கள் வேலைநிறுத்தம் செய்து காத்திருப்பு போராட்டம் நடத்தினர். அதன் விளைவாக கட்டாயத்தின் பேரில் செவிலியர்களின் ஊதியம் ரூபாய் 14 ஆயிரமாக உயர்த்தப்பட்டது. கடந்த ஆறு வருடமாக அவர்கள் பணி நிரந்தரம் செய்யப்படவில்லை.

காலமுறை ஊதியமும் வழங்கப்படவில்லை. நிர்ப்பந்தத்தின் பேரில் உயர்த்தப்பட்ட ஊதியம் உட்பட ரூ. 14,000/- மட்டுமே பெற்று பணியாற்றும் நிலை உள்ளது. இது மருத்துவ பணியில் சேவை புரியும் செவிலியர்களுக்கு இழைக்கப்படும் அநீதியாகும். தமிழக அரசின் இந்த நடவடிக்கை வன்மையான கண்டனத்திற்குரியதாகும்.

எனவே, இவர்கள் அனைவரையும் பணி நிரந்தரம் செய்து, காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டுமென தமிழக அரசை சிபிஐ(எம்) மாநிலக்குழு வலியுறுத்துகிறது.

இவ்வாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தீர்மானத்தில் வலியுறுத்தியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x