

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே காரில் சென்று கொண்டிருந்த முன்னாள் எம்.பி. சசிகலா புஷ்பா மீது மர்ம நபர்கள் திடீர் தாக்குதல் நடத்தினர்.
தூத்துக்குடியைச் சேர்ந்த முன்னாள் எம்.பி. சசிகலாபுஷ்பா வியாழன் நள்ளிரவு மதுரையிலிருந்து தனது காரில் தூத்துக்குடி நோக்கிச் சென்றார்.
மதுரை- தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே கார் வந்தபோது, பைக்கில் பின்தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் 2 பேர் முன்னாள் எம்.பி.சசிகலா புஷ்பா காரின் பக்கக் கண்ணாடியை இரும்புக் கம்பியால் அடித்து உடைத்துத் தாக்கினர்.
பதற்றமடைந்த கார் ஓட்டுநர் காரை நிறுத்தாமல் வேகமாகச் சென்றுள்ளார். ஆனாலும், மர்ம நபர்கள் சிறிது தூரம் துரத்திச்சென்று தாக்கியதில் காருக்குள் இருந்த முன்னாள் எம்.பி. சசிகலாபுஷ்பா காயமடைந்தார். சற்று நேரத்தில் தாக்குதல் நடத்திய மர்ம நபர்கள் இருவரும் தப்பிச்சென்றனர்.
அதையடுத்து, காவல் கட்டுப்பாட்டு மையம் 100 என்ற தொலைபேசி எண்ணுக்கு முன்னாள் எம்.பி.சசிகலாபுஷ்பா தகவல் தெரிவித்துள்ளார்.
பின்னர், மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, காரியாபட்டி போலீஸார் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது.
ஆனால், தாக்குதல் நடத்திய மர்ம நபர்கள் யார் என்பதும், எதற்காக தாக்குதல் நடத்தினர் உடனடியாகத் என்பதும் தெரியவில்லை. இதுகுறித்து, காரியாபட்டி போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.